search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிக்கனமும் அதனால் கிடைக்கும் சேமிப்பும்
    X

    சிக்கனமும் அதனால் கிடைக்கும் சேமிப்பும்

    செலவை சிக்கனமாக செய்வதின் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவதும் ஒரு விதமான சேமிப்பு தான்.
    நம் சம்பாத்தியத்தின் முதல் செலவு சேமிப்பாக இருப்பது நல்லது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஆயுள் காப்பீடு, சிறு சேமிப்பு வங்கிக்கணக்கு, ரெக்கரில் டெபாசிட் (ஆர்டி), குழந்தைகளின் சிறுசேமிப்பு என்று பல வழிகளில் பணத்தை சேமிக்கலாம். பணத்தை நேரடியாக சேமிப்பது என்பது சேமிப்பதற்கான ஒரு வழி என்றால், செலவை சிக்கனமாக செய்வதின் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவதும் ஒரு விதமான சேமிப்பு தான்.

    வீடுகளில் மின்சாரத்தை, தண்ணீரை சேமிக்க பழக வேண்டும். ஆளில்லாத இடங்களில் லைட், ஃபேன் எரிவதை நிறுத்த வேண்டும். சுடுநீருக்காக ஹீட்டர் போட்டால் அதை வெயில் காலம், மழைகாலங்களுக்கு ஏற்ப சூடாகும் அளவுகளை மாற்றி அமைத்து தேவையில்லாமல் அதிக நேரம் சூடாவதை குறைக்க வேண்டும்.

    வீடுகளில் மளிகை, காய்கறி, அசைவம் போன்வற்றை தாராளமாக வாங்கி சமைத்தாலும் கூட நமக்கு ஆகும் செலவை விட, ஹோட்டலில் சாப்பிடுவது நான்கு மடங்கை விட கூடுதலாகவே செலவாகும். வீட்டிற்கான அடிப்படை செலவுகளை குறைக்க நினைக்கும் நாம் ஹோட்டல் நொறுக்குத்தீனி, பெப்சி போன்ற குளிர்பானங்கள் போன்றவற்றிற்கான செலவுகளை கவனிப்பதில்லை. இம்மாதிரி செலவுகளை தவிர்த்தாலே பணம் மிச்சமாவதை உணரலாம்.

    துணிகள் வாங்கும் போது தேவைக்காக வாங்குவது நல்லது. கண்டிப்பாக வாங்க வேண்டும் என்ற கட்டயாத்திற்காகவோ, ஆடம்பரத்திற்காகவோ உடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உடைகளை தள்ளுபடி, சலுகை விலைகளில் கிடைக்கும் போது நல்ல பிராண்டா, நல்ல கடையா என்று பார்த்து வாங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.

    மின்னணு சாதனங்கள் வாங்கும் போது மின்சார சிக்கனம் மற்றும் ஆற்றல் சிக்கனம் கொண்ட சாதனமா என்று பார்த்து வாங்க வேண்டும். எல்இடி பல்புகள் பொருத்துவது, வெளியில் தட்பவெப்பம் குறைவாக இருக்கும் போது ஏசியை தவிர்ப்பது போன்றவை செலவை குறைக்க உதவும்.

    வாகன உபயோகத்தை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது. ஒருவர் மட்டுமே செல்ல முடிந்தவரை பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவது நல்லது. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது நல்லது. இருசக்கர, நான்கு சக்கர வாகனம் வாங்கும் போது எரிபொருள் சிக்கனம் கொண்டதாக பார்த்து வாங்குவது நல்லது.

    எந்த பொருளை வாங்கும் போதும் முடிந்தவரை கடனுக்கு வாங்காமல் இருப்பது நல்லது. 0% மாதத்தவணை எனும் பட்சத்தில் பொருட்களை வாங்கலாம். கடன் சுலபமாக கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற பொருட்களை வாங்குவது தவறு. முடிந்தவரை வீட்டில் குறைவான, அவசியமான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

    பொருட்களின் பராமரிப்புச்செலவு மற்றும் நம் பராமரிப்பு நேரத்தை மிச்சப்படுத்த இது உதவும். வீட்டில் அதிக பொருட்களை வைத்திருக்கும் போதும், வீட்டின் லாஃப்ட்களில் பொருட்களை போட்டு வைத்திருக்கும் போதும் அதில் கரப்பான், எலித்தொல்லைகள் தோன்ற ஏதுவாக இருக்கும். வீட்டில் ஒட்டடை தோன்றுவதும் அடைசலாக பொருட்கள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. தேவையற்ற பொருட்களை குறைப்பதால் மேற்கூறிய பிரச்சனைகள் தோன்றாது என்பதுடன் பணமும் மிச்சமாகும். எனவே சிக்கனமாய் இருப்பதாலேயே சேமிப்பும் கிடைக்கிறது என்பது நிதர்சனம்.
    Next Story
    ×