search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சொந்த வீட்டு கனவை நிஜமாக்கலாம்
    X

    சொந்த வீட்டு கனவை நிஜமாக்கலாம்

    வீடு என்பது குடும்பம், பாதுகாப்பு, நம்பிக்கை, வருமானம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருந்து வருகிறது.
    காடுகளில் உள்ள மரப்பொந்துகளிலும், கற்குகைகளிலும் வாழ்வை நடத்திய மனிதன் பாதுகாப்பு கருதி உருவாக்கிய கட்டமைப்புகள் பல படிநிலைகளை தாண்டி வீடாக மாற்றம் பெற்றிருக்கிறது. இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு என்ற அடிப்படைத்தன்மை கொண்ட வீடுகள், இன்றைய சூழலில் ஒருவரது தனித்தன்மை மற்றும் சமூக அந்தஸ்தை நிரூபிக்கும் சொத்தாக பார்க்கப்படுகிறது. ஒருவரது வீடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அவரை எடை போடுவது சமூக வழக்கமாக உள்ளது. காரணம், வீடு என்பது குடும்பம், பாதுகாப்பு, நம்பிக்கை, வருமானம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருந்து வருகிறது.

    கனவுகள் பொதுவானவை :

    ஒவ்வொரு மனிதருக்கும் அவரது நிலைக்கேற்ப சொந்த வீட்டு கனவு இருந்து கொண்டுள்ளது. கூலி வேலை செய்பவர், சொந்தமாக ஓட்டு வீடு கட்ட விரும்புவார். பெரிய தொழில் அதிபராக இருப்பவர் சொந்தமாக ஒரு தனித்தீவை வாங்கி அதில் விடுமுறைக்கான ‘ரெஸ்ட் ஹவுஸ்’ அமைப்பதற்கு விரும்புகிறார். ஆசையின் அளவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடுமே தவிர, அனைவரின் ஆழ்மன விருப்பமும் சொந்தமாக ஒரு சிறிய வீடாவது இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதை காண முடியும்.

    வருமானத்துக்கேற்ப வீடு :

    உழைத்த பணம் கைக்கும், வாய்க்கும் சரியாக இருக்கும்பட்சத்தில் சொந்த வீடு என்பது கனவாகவே இருந்து விடுமோ..? என்ற சந்தேகம் குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது. அதை நனவாக்க கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெளிவாக தெரிவிக்கிறார்கள். அதாவது ஒவ்வொருவரும் தமது வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை வீட்டு வாடகைக்கு என்று ஒதுக்கவேண்டியதாக இருக்கும். அந்த பணத்தை முறையாக பயன்படுத்தினால் சொந்த வீடு வாங்குவது சாத்தியம் என்று அவர்கள் சொல்வதை எளிதாக ஒதுக்கிவிட முடியாது.

    ஆரம்ப குழப்பம் :

    வாழும் வரையில் ஏதாவது ஒரு கூரையின் கீழ் அது வாடகை வீடாக இருந்தாலும், நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டுவதுதான் பாதுகாப்பாக இருக்கும். இன்றைய நிலையில், வங்கியில் வீட்டுக்கடன் பெற்று மாதாமாதம் தவணையை கட்டி முடிப்பதற்குள் ஆயுளே முடிந்து விடும் என்றும் ஒரு சிலர் நினைப்பதுண்டு. ரூ.30,00,000 மதிப்பில் ஒரு ‘பிளாட்’ வாங்கி வாடகைக்கு விடும்பட்சத்தில் அதன் வாடகைக்கும், வாங்கிய கடன் தொகைக்கான வட்டிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் சூழலில் சொந்த வீடு எப்படி லாபகரமாக இருக்கும்..? என்பது அவர்களது கேள்வி.

    இப்படியும் சிந்திக்கலாம் :

    இன்றைய நிலையில், நாம் மாத வாடகை ரூ.10,000 தருவதாக வைத்துக்கொள்வோம். சென்னை போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் என்ற அளவில் வாடகையின் அளவு கூடுதலாகிக்கொண்டு வரும் என்பது பொதுவான நடைமுறை. அந்த கணக்குப்படி வரக்கூடிய 20 வருடங்கள் நம்மால் எவ்வளவு மாதவாடகை தரப்பட்டிருக்கும் என்று கணக்கு போட்டால், இன்றைய நமது பட்ஜெட் வீட்டு விலை நிலவரமும், நமது 20 வருட வாடகையும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதை கவனிக்கலாம். அதே சமயம் 20 வருடங்கள் கழித்து வீடு நம்முடைய பெயருக்கு மாறியிருக்கும் என்பது இனிய நிஜமாக இருக்குமல்லவா..?

    கூடுதல் வாய்ப்புகள் :

    ஆரம்பத்தில் தவணைத்தொகை கட்டுவது சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், சில விஷயங்களை விட்டுக்கொடுத்துத்தான் சில விஷயங்களை பெற வேண்டும் என்பது பொருளாதார ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையாகும். மேலும், ஒருவர் தமது முதல் வீட்டை வாங்கும்போது கிடைக்கக்கூடிய வரிச்சலுகைகளையும், காலப்போக்கில் வருமானம் அதிகரிக்கும் சமயங்களில் கடனை இன்னும் சற்று விரைவாக திருப்பி செலுத்தும் வாய்ப்பு இருப்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளலாம். 
    Next Story
    ×