search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெருகி வரும் இணைய தள குற்றங்கள்
    X

    பெருகி வரும் இணைய தள குற்றங்கள்

    இணையதள தொழில்நுட்பத்தின் மூலம் மிக, மிக நூதனமான முறையில் குற்றங்கள் நடக்கின்றன.
    இணையதள தொழில்நுட்பத்தின் மூலம் மிக, மிக நூதனமான முறையில் குற்றங்கள் நடக்கின்றன. இப்படித்தான், ‘ஆஸ்திரேலியாவில் உள்ள பணக்காரர் ஒருவர் விமான விபத்தில் இறந்து போய் விட்டார். அவருடைய கோடிக்கணக்கான பணம் வங்கியில் கேட்பாரற்று இருக்கிறது. அந்த பணத்தை நாம் ரகசியமாக எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் ஒத்துழைத்தால், உங்களது வங்கி கணக்கில் அதை சிறிது காலத்திற்குள் மாற்றி வைக்கிறேன். அப்படி மாற்ற நீங்கள் உதவினால் அந்தப் பணத்தில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் பங்கு தருகிறேன்‘ என்று ஒரு மெயில் ஒருவருக்கு வந்தது. அதை நம்பி தனது வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவரின் கணக்கில் தற்போது இருப்பது பூஜ்ஜியம் மட்டுமே. இப்படி நாளுக்குநாள் இணையதளக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

    2006-ம் ஆண்டு உலகம் முழுவதும் 6 லட்சத்து 70 ஆயிரம் சைபர் கிரைம் புகார்கள் பதிவாகி இருந்தன. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு 11 லட்சம் டாலர்கள். அதன்பின் இணைதள குற்றங்கள் கட்டுக்கடங்காத அளவிற்கு பெருகின. தமிழகத்தைப் பொறுத்தவரை 2006-ம் ஆண்டு 146 வழக்குகள், 2007-ல் 217 வழக்குகள், 2008-ல் 340 வழக்குகள் என்று ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.

    இந்தியாவிலேயே அதிகமான இணைய தள குற்றங்கள் வழக்கு பதிவாவது மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்தான். நாடு முழுவதும் பதிவாகும் மொத்த வழக்குகளில் 87 சதவீதம் போபாலில்தான் பதிவாகிறது. மொபைல் மற்றும் இன்டர்நெட் தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கு மட்டும் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். உண்மை நிலையில் அதற்கான பற்றாக்குறையே அதிகமாக நிலவுகிறது. இணைய தளம் பயன்படுத்துவோரில் 60 சதவீதம் பேருக்குத்தான் அது குறித்த முழுமையான அறிவு இருக்கிறது. மீதமுள்ள 40 சதவீதம் பேர் அரைகுறை அறிவோடுதான் அதை இயக்குகிறார்கள். அவர்களைத்தான் சைபர் கிரைம் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். இந்தியாவில் சைபர் கிரைம் 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    இதில் ஆபாசப்படங்கள் வெளியிடுவது, ஒரு பெண்ணை ரகசியமாக படம் பிடித்து அந்தப் பெண்ணின் முகத்தை மட்டும் வைத்து வேறொரு பெண்ணின் நிர்வாண உடலில் அந்த முகத்தை இணைக்கும் ‘மார்பிங்‘ செய்வது போன்ற குற்றங்கள் தான் அதிகமாக நடைபெறுகின்றன.

    இணைய தள மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க ஆபாச வலைத்தளங்களை தவிர்க்க வேண்டும். இத்தகைய தளங்கள் மன ஆரோக்கியத்தையும் கெடுத்து பணத்தையும் இழக்க வைக்கிறது என்கிறார்கள் மனநல நிபுணர்கள். 
    Next Story
    ×