search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள்
    X

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள்

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    சர்க்கரை நோய் இந்தியாவை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ‘இன்டர்நேஷனல் டயாபெட்டிக் பெடரேஷன்’, ‘ 2007-ம் ஆண்டு இந்தியாவில் 4 கோடியே 65 லட்சம் சர்க்கரை நோயாளிகள் இருந்ததாகவும், 2025-ம் ஆண்டு இது 8 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் 2007-ம் ஆண்டு 24 கோடியே 60 லட்சம் சர்க்கரை நோயாளிகள் இருந்ததாகவும், 2025-ல் அந்த எண்ணிக்கை 38 கோடியாக உயரும் என்றும் கூறியுள்ளது.

    சர்வதேச கணக்கைவிட, இங்கே மிக அதிகமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான் இந்தியாவை ‘சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சர்வதேச சர்க்கரை நோயாளி கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது ஆண்டு முழுவதற்குமான திட்ட வாசகம் ஒன்றை வெளியிட்டு அதை நோக்கி விழிப்புணர்வு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வார்கள். இந்த ஆண்டு ‘பெண்களும் சர்க்கரை நோயும்’ என்பது கொள்கை அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

    இது மிகவும் கவனிக்கத்தகுந்தது. ஏன்என்றால் பெண்கள் தங்கள் உடல்நிலையை பெரும்பாலும் கருத்தில்கொள்வதில்லை. குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அவர்கள் தங்களை கவனித்துக்கொள்ள மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சர்க்கரை நோயை தாமதமாகத்தான் கண்டுபிடிக்க முடிகிறது. அதனால் அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, தோழிகள் போன்ற அனைவரின் ஆரோக்கியத்திலும் ஆண்கள் அக்கறை கொள்ளவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.



    பெண்கள் பொதுவாக உணவில் சரியான அக்கறை செலுத்துவதில்லை. அவர்களுக்கு உணவை வீணாக்குவது பிடிக்காது என்பதால் உணவை அதிகம் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடற்பயிற்சி செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் ஆண்களைவிட பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்து பாதிப்பிற்குள்ளாகும் அவஸ்தையும் பெண்களுக்கு அதிகம்.

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுகிறவர்களில் 50 சதவீதம் பேருக்கு அடுத்த பத்து வருடங்களுக்குள் நிரந்தரமாக சர்க்கரை நோய் ஏற்படலாம். மீதமுள்ளவர்களுக்கு 20 வருடங்களுக்குள் ஏற்படலாம். அதனால் கர்ப்பிணியாக இருந்தபோது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பின்பு உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும்.

    முறையற்ற உணவுகள், தவறான உணவுப்பழக்கங்கள், உடற் பயிற்சியின்மை, பாரம்பரியம், மனஅழுத்தம், தூக்கமின்மை, வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவை சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சர்க்கரைநோய் ஏற்படும்போது தலை முதல் பாதம் வரை பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள் ஆகியவைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
    Next Story
    ×