search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நவீன யுகத்தில் பெண்களின் உடல்நல பாதுகாப்பு
    X

    நவீன யுகத்தில் பெண்களின் உடல்நல பாதுகாப்பு

    திருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.
    இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொண்டுவரும் உடல்நலப் பிரச்சினைகள் முந்தைய காலக்கட்டத்தை காட்டிலும் முற்றிலும் வேறானவை. பெண்கள் பருவமடைகிற வயது குறைந்துகொண்டே இருக்கிறது. இது இளம் சிறுமிகளை கடுமையான மனநெருக்கடிகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. அவர்கள் மாதவிடாய் கால கட்டத்தில் சுகாதாரத்தில் கவனம் செலுத்தவும் தவறான நபர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    உரிய வயதிற்கு முன்பே பருவமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களும்கூட இதனால் வருத்தமடைகின்றனர். உடலின் வேகமான வளர்ச்சி, அதிக அளவிலான அல்லது தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் உரிய வயதிற்கு முன்பே பருவமடைய நேரிடுகிறது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் கட்டிகள் உருவாவதாலும் முன்கூட்டியே பருவமடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாகவே குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைகின்றனர்.

    தற்போதைய கல்வி முறைகள் காரணமாக அதிக நேரம் படிக்க வேண்டி இருப்பதால் இயல்பிலேயே குழந்தைகளுக்கு போதுமான அளவில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. மிகவும் தாமதமாக தூங்கச் செல்வதும், தாமதமாக விழித்து எழுவதும் உடல் கடிகாரத்தின் சமநிலையை பாதிப்பதோடு, ஹார்மோன்களின் சமச்சீரான இயக்கத்திலும் பாதிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித சமுதாயம் எண்ணற்ற வகைகளில் பயன்களை அடைந்திருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வீடியோ கேம் விளையாட்டுகள், சமூக ஊடகங்கள் ஆகியவை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதனால் மேலே குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதோடு, அருகில் இருக்கும் குடும்பத்தினேரோடு செலவிடும் நேரமும் குறைந்து போகிறது. சமூக ஊடகங்களின் வழியாக அறிமுகம் இல்லாதவர்களோடு நட்புகொள்ளும்போது சிக்கல்களை சந்திக்க வேண்டிய ஆபத்தும் இருக்கிறது. இவையெல்லாம் உடலில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளால், ஹார்மோன்களின் சமச்சீர் இயக்கம் மேலும் மோசமான நிலையை அடைகிறது.

    வளரிளம் பருவத்தில் செய்துகொள்ளும் சோதனையில் ரத்தச் சோகை, எடை பிரச்சினைகள், தைராய்டு மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரிக் சின்ட்ரோம்(கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்), ஹார்மோன் கோளாறுகள் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருக்கும் பிரச்சினை பத்தில் மூன்று பேருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கான சோதனையின்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ரூபெல்லா மற்றும் சின்னம்மை வைரஸ்களின் தாக்குதல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

    எதிர்காலத்தில் பெண்களின் வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்றவகையில் இளம்வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்கு வளரிளம் பருவ சோதனை நல்லதொரு வாய்ப்பாகும். பாரம்பரியமாக, இந்த பாதுகாப்பு முறைகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களால் தேவைக்கு ஏற்றபடி செய்துகொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இளம்வயதினர் உடல்நலத்திற்கு உகந்த வாழ்க்கை முறையிலிருந்து திசை திரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டிருப்பதால் அவர்களின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

    திருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களால் இயற்கையாக கருவுற இயலாதபோது மருத்துவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் சோதனைகள் செய்துகொள்வதன் மூலம் திருமணத்திற்குப் பின்னால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு கவலைகளையும் தவிர்க்கமுடியும்.



    குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் கருத்தரிப்பதற்கு முன்பான சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இச்சோதனையானது கர்ப்ப காலத்தின்போது தாய் சேய் நலத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கும் ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கும் உதவுகின்றது.

    கருத்தரிப்புக்கு முந்தைய மருத்துவ ஆலோசனையால் கர்ப்பக் காலத்தின்போது கடுமையான முடிவுகள் எடுப்பதையும் வருந்தத்தக்க நிகழ்வுகளையும் தவிர்க்கமுடியும். ஆனால் இந்தியாவில் இச்சோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் ஏறக்குறைய 90 சதவிகித கருத்தரிப்புகள் திட்டமிடப்படாமலேயே நிகழ்கின்றன.

    வீட்டிலேயே செய்துகொள்ளப்படும் சோதனையின் மூலம் கருத்தரிப்பை உறுதி செய்துகொண்டவுடன் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது தற்போது நடைமுறையில் இருந்துவருகிறது. கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் செய்வதை மிகையாக கருதக்கூடாது. தாய், சேய் இருவரின் நலத்திற்கும் அது மிகவும் அவசியமானதாகும்.

    பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலையை பார்க்கமுடிகிறது. முழுக்கவனமும் குழந்தைகளின் மீதே இருப்பதால் பெரும்பாலும் தாயின் உடல்நலத்தின் அக்கறை காட்டப்படுவதில்லை. தாயின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால், தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, தன்னுடைய உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

    ஏதாவது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே மருத்துவ உதவியை நாடுவது வழக்கமாக இருக்கிறது. உடல்நலம் நல்ல நிலையில் இருந்தாலும்கூட நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்வதற்கு பரிசோதனைகள் செய்துகொள்வதே சரியான அணுகுமுறை. வாழ்க்கைமுறையினால் ஏற்படக்கூடிய நீரிழிவு, கொழுப்பு, மிகை ரத்த அழுத்தம் மற்றும் சிலவகையான புற்றுநோய்களின் அறிகுறிகளை வளர்ந்த நிலையிலேயே தெரிந்துகொள்ள முடிவதால் இத்தகைய சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.

    முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அடிப்படையான உடல்நல சோதனைகள், ரத்த சோகை, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான சோதனைகள், மார்பக மற்றும் கர்ப்பப்பை சோதனைகள் (ஸ்கேன் மற்றும் பாப் ஸ்மியர்) உள்ளிட்ட முழுமையான உடல் சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் அதை உறுதிசெய்து கொள்ளவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும் அச்சோதனை உதவியாக இருக்கும். பிரச்சினையை உடனடியாக தெரிந்துகொண்டால் பிறகு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை எளிதாக தவிர்க்க முடியும். வருமுன் காத்துக்கொள்வதே என்றென்றும் சிறந்த வழிமுறை.

    பெரும்பாலான பெண்கள் தங்களது கடைசி பிரசவத்திற்குப் பிறகு மெனோபாஸ் காலக்கட்டத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மனோநிலை பாதிப்புகள், உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    அந்தக் காலக்கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போல நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு கோளாறுகளால் மாதவிடாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எலும்புகள் பலம் இழக்க ஆரம்பிப்பதால் சத்தான உணவுடன் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்களையும் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ச்சியான உடற்பயிற்சியும் மன அழுத்தம் குறைப்பதற்கான முயற்சிகளும் இந்த காலக்கட்டத்தில் அவசியமானவை. ஏனெனில் வாழ்க்கையின் சவால்கள் இந்தக் கட்டத்தில் உச்சத்தை எட்டி, மனதின் சமநிலையை தடுமாறச் செய்யும்.

    டாக்டர் கவுரி மீனா, தாய்மை நல நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை
    Next Story
    ×