search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்
    X

    பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்

    ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடுத்தர வயதுள்ள 10 பெண்களில், இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். மனித உடலில் எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதாரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை.

    ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, குழந்தை பிறக்கும் வரைதான் கர்ப்பப்பை முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்சினையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.

    இந்த கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பது தான் முகத்தில் அறையும் உண்மை என்கிறது, சமீபத்திய கள ஆய்வு.

    ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம். கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த அளவிற்கு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள்.

    கர்ப்பப்பையை எடுத்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (கட்டியின் அளவு, தன்மை, புற்றுநோய் எனில் அகற்றுவது அவசியம்). இல்லையென்றால் எடுக்கக் கூடாது. ஏராளமான பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்ற காரணத்திற்காக கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள்.



    இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை? உயிரை உருவாக்கும் புனிதமான கர்ப்பப்பை, அந்த அளவிற்கு இம்சை கொடுக்கிறதா?ஒருபோதும் இல்லை!

    கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவீதத்தினர், நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    மேலும் கர்ப்பப்பை இருக்கும் போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும், துள்ளலும், காணாமல் போய் விடுகின்றன. எப்போதும் சோர்வாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டும் பலருக்கு குணமாவதில்லை. ஒரு சாதாரண புடவை எடுக்க ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

    தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும், பெண்மைக்கும் நல்லது என்கிறது, அந்த ஆய்வு.
    Next Story
    ×