search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்
    X

    நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்

    அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.

    அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

    மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.

    அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.



    உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

    பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.

    ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
    Next Story
    ×