search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புடவைகளின் புராதனமும் வரலாறும்
    X

    புடவைகளின் புராதனமும் வரலாறும்

    உலகெங்கும் உள்ள ஆடை வகைகளில், தைக்கப்படாத பல வகைகளில் உடுத்தப்படுகிற, கவர்ச்சியான தோற்றம் கொண்ட புடவைகளுக்கு மிகவும் புராதன, சுவையான வரலாறு உண்டு.
    உலகெங்கும் உள்ள ஆடை வகைகளில், தைக்கப்படாத பல வகைகளில் உடுத்தப்படுகிற, கவர்ச்சியான தோற்றம் கொண்ட புடவைகளுக்கு மிகவும் புராதன, சுவையான வரலாறு உண்டு.

    சிந்து சமவெளி நாகரிகமும், மெஸப்பொட்டோமியன் நாகரிகமும் தான் முதலில் நீளமான துணியை இடுப்பில் அணியும் வழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. நீளமான துணியை இடுப்பில் சுற்றி நடுவில் உள்ள துணியை கொசுவமாக இரண்டு கால்களுக்கு இடையே பின்புறம் கொண்டு சென்று (பஞ்சகச்சம் போல) பின்புற இடுப்பில் செருகிக் கொள்வதே முதலில் இவர்களிடம் இருந்து வந்தது.

    பெண்கள் இடுப்பில் மட்டுமே இந்த ஆடையை அணிந்து வந்தனர். உடலின் மேற்புறம் மார்பின் மீது எந்த துணியையும் அவர்கள் அணியவில்லை. குளிருக்காக மிருகங்களின் தோல் அல்லது கம்பளி துணிகளை அவ்வப்போது அணிந்து கொண்டனர். நாகரிகம் வளரத் தொடங்கியபோது ஒரு சிறு துணியை மார்பை மூடும் வகையில் போர்த்தி மார்பின் நடுவில் முடிச்சு போட்டு அணியத் துவங்கினர். இதுவே கச்சை என்று அழைக்கப்பட்டு, கீழே அணியும் துணி நீவியென்று அழைக்கப்பட்டது. கச்சை என்பதே இன்றைய சோளியின் முன்னோடியாகும்.

    பருத்தி தவிர பட்டு, பீதாம்பரம், பட்டோலா போன்ற துணிகள் ஆரியர்கள் மூலமும், முகலாயகர்கள் மூலமும் வரத் தொடங்கிய பின்னர் உத்தரியா என்ற அழகான வேலைப்பாடு கொண்ட மற்றொரு துணி கச்சையின் மேலே அணியப்பட்டது.



    நீவி என்ற கீழே அணியப்பட்ட துணியை இரண்டு கால்களுக்கு நடுவே அணியும் வழக்கம் மாறி, கீழே ஒரு துணியை இடுப்பை சுற்றி அணிந்துகொண்டு, அழகிய வேலைப்பாடு கொண்ட மற்றொரு அகலம் குறைவான துணியை இடுப்பை சுற்றி கட்டி நடுவில் முடிச்சு போட்டு அணியப்பட்டது. இந்த துணி ஆசனா என்று அழைக்கப்பட்டது.

    கிரேக்கர்கள், பாரசீகர்கள் மேலே அணியும் துணியை கொசுவமாக செய்து தோள்பட்டையின் ஒருபுறம் போட்டுக்கொண்ட இடுப்பில் பெல்ட் அணிவர். இக்கலாசாரம் இந்திய பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கச்சையின் மேலே ஒரு மெல்லிய துணியை கொசுவி தோள்பட்டையின் ஒருபுறம் தொங்கவிட்டு, மறுபுறத்தை உடலை சுற்றிகொண்டு வந்து இடுப்பில் செருகிக் கொண்டனர்.

    பாரசீகர்கள் தான் முதன்முதலில் துணிகளை தைத்து அணிவதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள். அதன் பின்னர் கச்சையை லூசாக தைத்து ஜாக்கெட்டாக அணியும் வழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் உடலோடு ஒட்டிய வகையில் சிறியதாக ஜாக்கெட்டை அணியும் முறையே சோளி என்று மாறியது. முகலாயர்கள் துணிகளை தைக்கும் கலையையும், எம்ப்ராய்டரி, கற்கள் பதிப்பு, ஜரிகை வேலைப்பாடு போன்றவைகளையும் மிகவும் ஆடம்பரமாகவும், அழகாகவும் மாற்றியவர்கள் எனலாம்.

    உடலோடு ஒட்டி சோளி அணியப்பட்ட பிறகு கீழே அணியும் நீண்ட துணியின் ஒரு பகுதியையே இடுப்பை சுற்றி மேலே கொண்டு வந்து மேலே கொசுவம் செய்து தோளில் குத்திக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு இன்றைய புடவை அணியும் முறை ஏற்பட்டது. இதன் பின்பு தான் நீளமாக புடவைகள் அழகிய டிசைன்களில் வரத் தொடங்கின. இவ்வாறு புடவையின் வரலாறு மிகவும் நீண்டதும் சுவாரசியமானதுமாகும்.
    Next Story
    ×