search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காதோரம் கதைகள் சொல்லி உள்ளம் கவரும் டெம்பிள் ஜிமிக்கி
    X

    காதோரம் கதைகள் சொல்லி உள்ளம் கவரும் டெம்பிள் ஜிமிக்கி

    இன்றைய நாளில் பெண்களை கவரும் வகையில் ஜிமிக்கிகள் வெவ்வேறு விதமான பெரிய தொங்கும் அமைப்பு மற்றும் அதற்கேற்ற காதணி அமைப்பும் கொண்டவாறு வருகின்றன.
    காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி என்பதற்கு விளக்கமாய் காதணிகளில் எத்தனையோ விதங்கள் உள்ளன. ஒவ்வொரு காதணியும் ஒவ்வொரு அமைப்பிலும், ஒவ்வொரு கதைகளை கூறும். அதில், பெண்கள் விரும்பி அணியும் ஜிமிக்கி என்ற காதணி வகை முன்பு பெரிய விழாக்கள் மற்றும் திருமண விழாவிற்கு மட்டும் அணிந்து சென்றனர். அதில், முன்பு அதிக டிசைன்களும் இல்லை.

    ஆனால், நவீன காலத்தில் இள நங்கையர் அணிகின்ற ஜிமிக்கி நகைகள் என்பது விதவிதமான டிசைன்களில் அணிவகுக்கின்றன. ஜிமிக்கிகள் காதின் மடல் பகுதியில் பொருத்தமாக ஸ்டெட் அமைப்பும் இதில் இணைப்பாக பெரிய தொங்கும் அமைப்பும் இருக்கும். பழங்கால ஜிமிக்கிகள் அழகிய அமைப்பில் தொங்கும் படி இருக்கும். இன்றைய நாளில் இந்த ஜிமிக்கிகள் வெவ்வேறு விதமான பெரிய தொங்கும் அமைப்பு மற்றும் அதற்கேற்ற காதணி அமைப்பும் கொண்டவாறு வருகின்றன.

    ஒவ்வொருவரும் தனக்கான ஜிமிக்கி தேர்ந்தெடுப்பதற்கு என அதிகம் மெனக்கெட வேண்டியது உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு ஜிமிக்கி கண்ணை கவரும் அற்புத டிசைன்.



    பல அடுக்குகளில் தொங்கும் ஜிமிக்கிகள் :

    ஜிமிக்கி எனும்போது ஒரு கூடை அமைப்பு தொங்க விடப்படும். தற்போது அடுக்குகள் கொண் கூடை அமைப்பில் இரண்டு, மூன்று, நான்கு என கீழிறங்க இறங்க கூடை அமைப்பு சிறியதாக மாறி அதற்கும் கீழ் சிற மணி உருளை நடனமாடும்.

    இதற்கு அடுத்து சிறு கோயில் மணிகள் அமைப்பில் அடுக்கடுக்காய் தொங்க விடப்பட்டும் ஜிமிக்கி வருகின்றன.

    அத்துடன் ஓசையெழுப்பும் மணி அமைப்பில் சற்று பெரியதாய் நடுவில் பந்து மணி உருளைகள் ஆடும் அமைப்பில் தொங்க விடப்பட்டிருக்கும்.

    பழங்கால தங்க நாணய அமைப்பு ஜிமிக்கிகள் :

    இவை சற்று வித்தியாசமான அமைப்பில் உருவாகின்றன. காதுடன் பொருந்தும் மேல் பகுதி பழங்கால தங்க நாணய முத்திரை போன்று அச்சு அமைப்பில் அன்னம், மயில் உருவம் பதித்ததாய் இருக்கும். தொங்கும் குடை அமைப்பு ஏதும் டிசைன்கள் செய்யப்படாது வழவழப்பான குடை அமைப்பில் இருக்கும். அதன் கீழ் வண்ண மணிகள் ஓரப்பகுதி முழுவதும் தொங்க விடப்படும். இது, நவீனம் புகுத்தப்பட்ட பழங்கால ஜிமிக்கி வடிவமைப்பு.



    நீள் தோரண அமைப்பில் தொடங்கும் ஜிமிக்கிகள் :

    குடை அமைப்புகள் இன்றி நீள் தோரண அமைப்பில் சில பூக்கள் வரிசையாய் தொங்க விடப்பட்டு நடுவில் மணியும், பியர் வடிவில் தோரணமும் அதன் கீழ் டிசைன் மணிகள் தொங்க விடப்பட்டும், இதய வடிவில் நடுப்பகுதி அதற்கு கீழ் சிறு கூடை அமைப்பு தொங்குவது போன்றும் ஜிமிக்கிகள் வருகின்றன.

    அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த டெம்பிள் ஜிமிக்கிகள் :

    பாரம்பரிய கோயில் சின்னங்கள் கலை நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட ஜிமிக்கிகள் வருகின்றன. இவை பாரம்பரியமும், கலாசார பின்னணி கொண்ட பொக்கிஷங்களாக உள்ளன. இதில் மகாலட்சுமி, யாளி, அன்னபட்சி, யானையுடன் மகாலட்சுமி, மயில் போன்றவை அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது. சில அன்ன பட்சிகள் தத்ரூபமாக தங்கத்தில் உருப்பெற்றும் உள்ளன. தொங்கும் மீன் அமைப்பு ஜிமிக்கிகள் ஆன்டிக் நகைகளாய் அணிவகுக்கின்றன.

    இவை மட்டுமின்றி கோன் அமைப்பு, திராட்சை கொத்து அமைப்பு, சரவிளக்கு, தொங்கும் செயின் அமைப்பு என பல புதுமை வடிவங்களும் நாளுக்கு நாள் மக்களை புதிய ஜிமிக்கி வாங்க ஆர்வத்தை தூண்டுகின்றன.
    Next Story
    ×