search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்
    X

    வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்

    வீட்டிலேயே எளிய முறையில், குறைந்த செலவில் பேசியல் செய்யலாம். எப்படி இயற்கை முறையில் பேசியல் செய்யலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    பெண்கள் முகத்தில் பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது. வருத்தப்படாதீங்க இப்போது நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால்
    ஏதாவது பழக்கூழ்

    செய்முறை :

    மசாஜ் செய்யும் போது மசாஜை மேல் நோக்கி செய்ய வேண்டும். கிளன்சிங் லோசனாக பாலைப் பயன்படுத்தி கழுத்திலிருந்து முகம் வரை தடவி பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

    பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

    மசாஜ் செய்யும் போது முகத்தில் விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்தாற்போல் வைத்து செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்போது எந்த காரணத்தைக் கொண்டும் நடுவில் கையை எடுக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு எடுக்க நேரிட்டாலும் ஒரு கை முகத்திலேயே இருக்க வேண்டும். முகம் முழுவதும் நுனி விரல்களைக் கொண்டு மெதுவாக தட்டிவிட விட வேண்டும்.

    மசாஜை கழுத்திலிருந்து ஆரம்பித்து விரல்களை மெதுவாக மேல்நோக்கி தாடைக்கு கொண்டு வரவேண்டும். தாடையின் நடுப்பகுதியின் பக்கவாட்டில் செய்ய வேண்டும். தாடையிலிருந்து மேல்நோக்கி கன்னப்பகுதிகளில் செய்ய வேண்டும். உதட்டினைச் சுற்றியும், உதட்டின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். முதல் மூன்று விரல்களைக்கொண்டு சிரிப்பு வரிகளின் (Laugh Line) மீது மசாஜ் செய்ய வேண்டும்.

    கன்னத்தில் முதல் மூன்று விரல்களைக் கொண்டு கிள்ளியும் மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் மேலும், மூக்கின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு நடுவில் குறுக்காக முதல் விரலைக்கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களை பிடித்தும் விட வேண்டும்.

    நெற்றியில் முதல் இரு விரல்களைக் கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும். பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்களில் அழுத்திவிட வேண்டும். பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்கள் தாடையின் நடுப்பகுதி, மூக்கின் பக்கவாட்டு இடம், நெற்றி மேல்முடிவில், புருவங்களின் நடுவில், கண்புருவங்களின் முடிவின் சிறிது கீழ்பகுதி, மூக்குத்தண்டிற்கும், கண்களின் ஆரம்ப பகுதி ஆகும்.

    தூக்கம் வராதவர்களுக்கு கைகளை சுண்டுவிரல்களின் பக்கமாக வைத்து நெற்றியில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும். கண்பாவைகளை மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

    சைனஸ் பிரச்சனையுள்ளவர்களுக்கு மூக்கின் முடிவிலிருந்து கன்னப்பகுதிக்கு செல்லும் கன்ன எலும்புகளின் கீழ் நன்றாக அழுத்தி கீழ் நோக்கி தாடை வரை கொண்டு வந்துவிடவும். அவ்வாறு செய்தல் சைனஸ் பிரச்சனையிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும்.
    Next Story
    ×