search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இயற்கை உணவு பல நோய்களுக்கு தீர்வு தரும்
    X

    இயற்கை உணவு பல நோய்களுக்கு தீர்வு தரும்

    காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல நோய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
    காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல நோய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு, கறிவேப்பிலைச் சாறு, புதினா, வெண்பூசணி அல்லது வாழைத்தண்டு சாறு, எலுமிச்சை சாறு இவற்றில் ஏதோ ஒன்றை, தினமும் காலையில் மாற்றி மாற்றி குடித்து வந்தால் நோய் நெருங்காது. காலையில் நேரம் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடித்து இரண்டு மணிநேரத்திற்கு பின் 2-வது சாறு குடிக்கலாம். அதன் பிறகு ஒன்றரை மணி நேர இடைவெளியில் காலை உணவு உண்ணலாம்.

    நேரம் இல்லையெனில் ஏதாவது வகை சாறு மட்டும் குடித்து விட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். வில்வ இலைச் சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது. காலை 9 மணிக்கு, பச்சைக் காய்கறி கலவை அல்லது பழங்கள், இதில் முழுமையான பச்சைக் காய்கறிகளை மட்டும் வைத்து செய்த கலவை அல்லது முழுமையான பழ வகைகள் இந்த இரண்டில் ஏதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடலாம்.

    புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் சிறிது நாட்களுக்கு காலையில் பழங்கள் மட்டும் உண்ணலாம். பின்னர் சிறிது நாட்கள் காய்கறி கலவை மற்றும் பழ வகைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு பழகவும். அதன் பின்னர் காய்கறி கலவை மட்டும் தொடர்ந்து காலை உணவில் சாப்பிடுவது நல்லது. கேரட், முட்டைக்கோஸ், முளைகட்டிய பச்சைப்பயறு கலவை. சவ்சவ், முள்ளங்கி பீட்ரூட் கலவை. காலிபிளவர், குடைமிளகாய் கலவை நல்லது. எதற்கும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காய்கறிகளில் ஆறு சுவைகளும் உள்ளன.



    முடிந்த வரை அந்தந்த பருவ காலத்தில் அந்தந்த பகுதிகளில் விளையக் கூடிய பழங்களை சாப்பிடுவது உத்தமம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை தவிர்க்கவும். நம் நாட்டு ஆரஞ்சு, பப்பாளி, சாத்துக்குடி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, மாம்பழம், சப்போட்டா ஆகியவை சாப்பிடலாம்.
     
    மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் சாத்வீகமாக சமைத்த உணவு உண்ணலாம். சாத்வீக உணவில் எண்ணெய் மற்றும் புளி சேர்க்கக் கூடாது. சாதாரண உப்பிற்கு பதில் இந்துப்பு பயன்படுத்த வேணடும். காரம் குறைவாக சேர்க்கவும். சாம்பாரில் துவரம் பருப்பு குறைவாகவும் காய்கறி அதிகமாகவும் இருக்க வேண்டும். 

    சாதம் செய்ய கைக்குத்தல் அரிசி அல்லது பட்டை தீட்டப்படாத சிறுதானிய வகைகளான வரகு, சாமை, குதிரைவாலி, தினை, பனிவரகு இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும். இவற்றை இட்லி செய்வதற்கும் பயன்படுத்தலாம். ரொட்டி செய்ய கோதுமை, ராகி, கம்பு, சோளம் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும். மாலை 5 மணிக்கு தேநீர் அல்லது சுக்கு மல்லி பானம், ஆரஞ்சு பானம், பச்சை தேநீர் அருந்தலாம். இரவு 7.30 அல்லது 8 மணிக்குள் இரவு உணவாக பழங்கள் மட்டும் உண்ண வேண்டும். சமைத்த உணவு கூடாது.
    Next Story
    ×