search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
    X

    வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

    பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இந்த வைட்டமின் அதிகமாகி விட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகும்.
    பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். ஆனால், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான்.

    பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இதன் குறைபாட்டால் கண் எரிச்சல், மாலைக்கண், மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வைக்குறைவு, வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல் கண்பார்வை ஒத்துப் போகும் நிலை குறைந்து போவது போன்றவை ஏற்படும். 

    வைட்டமின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டால் கண்ணீர் சுரப்பியின் வெளிப்பகுதி திசுவறைகள் தடித்து விடும். கண்ணீர் சுரப்பது நின்று விடும். விழிக்கோளத்தில் வெள்ளை நிறம் காணப்படும். வெள்ளை விழியில் சில புள்ளிகள் உண்டாகும். தொடர்ந்து வைட்டமின் ஏ பற்றாக்குறை நீடித்தால் முழுப்பார்வையும் இழந்து விடும். 



    கருவிழியில் துளைகள் உண்டாகும். கண்கள் அடிக்கடி வறண்டு காணப்பட்டால் வைட்டமின் ‘ஏ‘ பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் இந்த வைட்டமின் சத்து குழந்தைகளுக்கு தரப்படலாம். கேரட், கறிவேப்பிலை போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைய உள்ளது.

    அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி வைட்டமினுக்கும் பொருந்தும். இந்த வைட்டமின் அதிகமாகி விட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகும். பசியிருக்காது. உடலில் நமைச்சலுடன் கூடிய தோல் சிவப்பு, வலியுடன் கூடிய தசை வீக்கம், கை-கால்களின் எலும்புகளில் வலியுடன் கூடிய வீக்கங்கள் உண்டாகி விடும். 

    மேலும், மூளையில் உள் அழுத்தம் அதிகரித்து தலைவலியும் ஏற்படும். தேவையற்ற அளவுக்கு வைட்டமின் ‘ஏ‘ யை உள்ளுக்குள் கொடுத்து விட்டு பின்னர் வேறு பிரச்சினைகளை உருவாக்கி விட்டு இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல், அந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும்.

    வைட்டமின் ‘ஏ‘ என்பது குழந்தைகளுக்கு 1500 முதல் 6000 இன்டர்நேஷனல் யூனிட்டுகளும், பெரியோர்களுக்கு 5000 யூனிட்டுகளும், கர்ப்பிணிகளுக்கு 6000 யூனிட்டுகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 யூனிட்டுகளும் தான் தேவை. இதனை கவனத்தில் கொண்டு இந்த அளவில் கிடைக்கும் சத்தூட்ட பானங்களை சரியான அளவில் அவரவர் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
    Next Story
    ×