search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் அவல்
    X

    உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் அவல்

    அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
    அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைகுத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.

    அரிசியில் இருந்து வெள்ளை அவல், சிகப்பு அவல் போன்றவைகளுடன் தற்போது தினை அவல், கம்பு அவல், சோளஅவல், கேழ்வரகு அவல் போன்றவாறு விதவிதமான அவல்கள் தற்போது இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.

    அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடிய அவல் சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கிடைக்கின்ற அவல் சமைக்கப்படாத உணவாக இறைவனுக்கு படைக்கப்படும் உணவு பொருளாக உள்ளது. எந்தவித பண்டிகைகளிலும் அவல், கடலை, வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு குசேலன் கொடுத்தது அவல் தான்.

    அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம்.



    சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் இனிப்பு மிக பிரபலமானது. அதுபோல் சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.

    கம்பு என்பதனை மாவாகவும், ரவையாக உடைத்தும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது அரிசி அவல் போன்று கம்பு அவலும் தயாரித்து விற்கப்படுகின்றன. கம்பின் சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கம்பு அவல் கொண்டு உடனடி சமைக்காத உணவு வகைகள் செய்து உண்ணலாம். இனிப்பு மற்றும் கார என்றவாறும், காய்கறி துருவல்கள் இணைந்தவாறும் கம்பு அவலை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    தினையரிசி பயன்பாடு மீண்டும் புத்துணர்வு பெற்று ருசிமிக்க உணவுகளால் தினசரி உணவில் இணைந்துள்ளன. அதில் சுவைமிக்க தினை அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவையும் சந்தையில் கிடைக்கின்றன. ஒரே மாதிரியான சிற்றுண்டி மற்றும் காலை உணவுகளை கைவிட்டு புதுமையான சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.
    Next Story
    ×