search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?
    X

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?

    டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? அவை பரவுவதை தடுப்பது எப்படி? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் விளக்கம் அளித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதவிர மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? அவை பரவுவதை தடுப்பது எப்படி? என்பது பற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் கூறியதாவது:-

    வைரசால் ஏற்படுகிறது :

    டெங்கு காய்ச்சல் ஒருவகை வைரசால் ஏற்படுகிறது. டெங்கு வைரஸ்களில் 4 வகைகள் உள்ளன. ஒரேயொரு வகை டெங்கு வைரஸ் தாக்கினால் சாதாரண டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வகை டெங்கு வைரஸ்கள் தாக்கினால் ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் ஏற்படும். சாதாரண டெங்கு காய்ச்சல் மருந்து, மாத்திரைகளுக்கே குணமாகி விடும்.

    ரத்தக்கசிவு காய்ச்சல் இருந்தால் உடலுக்குள் ரத்தக்கசிவு, பிளாஸ்மா கசிவு இருக்கும். கடுமையான காய்ச்சல், கண்களில் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு, தோல்களில் ரத்தத்திட்டுகள், வயிறு, நுரையீரலில் நீர்கோர்த்து வயிற்றுவலி, மூச்சுத்திணறல் ஏற்படும், மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்தி விடலாம்.

    கொசுக்கள் மூலம் பரவுகிறது :

    மருத்துவமனைக்கு செல்லாமல் நீங்களாகவே மருந்துக்கடைகளில் காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால் காய்ச்சல் கட்டுப்பட்டது போல இருக்கும், ஆனால் உடலுக்குள் ரத்தக்கசிவு, பிளாஸ்மா கசிவு இருப்பது தெரியாததால் மோசமான நிலைக்கு தள்ளி விடும். எனவே கடுமையான காய்ச்சலுடன், கண்களில் வலியோ, ஈறுகளில் ரத்தக்கசிவோ, கருப்பு நிறத்தில் மலம் போனாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். நீங்களாகவே மருந்துக்கடைகளுக்கு சென்று காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல் இருப்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

    டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வகை கொசுக்களால் பரவுகிறது. டெங்கு காய்ச்சலுள்ளவர்களை கடித்த ஏடிஸ் கொசுக்கள் மற்றவர்களை கடிக்கும் போது அவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் 500 மீட்டர் தொலைவுக்குள் தான் பறக்கும் என்பதால் ஓரிடத்தில் டெங்கு காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும்.



    தடுப்பு நடவடிக்கை :

    இதனால் மாவட்டத்தில் எங்கிருந்தாவது அதிக எண்ணிக்கையில் காய்ச்சலுடன் கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை தினமும் கண்காணிக்கிறோம். எங்கிருந்தாவது அதிக எண்ணிக்கையில் காய்ச்சலுள்ளவர்கள் வந்தால் உடனடியாக அப்பகுதிக்கு சுகாதாரக்குழுவினரை அனுப்பி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். எந்தெந்த வீடுகளில் காய்ச்சலுள்ளவர்கள் இருக்கிறார்கள்? என்பதை சுகாதார பணியாளர்கள் மூலம் கணக்கெடுத்து, அந்த வீடுகளில் கொசுப்புழு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றை அழிக்கிறோம்.

    இதற்காக ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தொகுப்பு ஊதியத்தில் தலா 30 பணியாளர்களை நியமித்து உள்ளோம். இதனால் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    கழுவி ஊற்றுங்கள் :

    என்றாலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் தோட்டங்களில் டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள் போன்றவற்றில் நல்லதண்ணீர் தேங்க விடாதீர்கள்.

    ஏனெனில் டெங்கு வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிட்டு பெருகுகின்றன. அந்த முட்டைகள் ஒருவாரத்துக்குள் கொசுக்களாகி விடும். எனவே தான் வாரத்துக்கு ஒருமுறை பாத்திரங்கள், தண்ணீர் தொட்டிகளை கழுவி ஊற்றுங்கள் என்று சொல்கிறோம். கழுவி ஊற்றினால் டெங்கு கொசுக்களை முட்டை, கொசுப்புழு பருவத்திலேயே அழித்து விடலாம். எனவே பொது மக்கள் ஒத்துழைத்தால் நீர் நிலைகளிலேயே ஏடிஸ் கொசுக்களை அழித்து விடலாம்.

    இவ்வாறு டாக்டர் ஜவஹர்லால் கூறினார்.
    Next Story
    ×