search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியமா?
    X

    எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியமா?

    வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு எனிமா தேவை என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    உணவு செரிமானத்துக்குப் பிறகு, கழிவுகளாக வெளியேறும்போது, சில நேரத்தில் பெருங்குடலிலேயே தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெருங்குடலைத் திரவம்கொண்டு அலசிச் சுத்தப்படுத்தும் மருத்துவமுறைக்குத்தான் ‘எனிமா’ என்று பெயர்.

    எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்றச் செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. நீண்டகாலம் பயன்படும் முறை. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள மலக்குடல் மற்றும் பெருங்குடலின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனைத் தரும்.

    * தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள்.
    * ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள்.
    * முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்.
    * பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்.
    * மலம் கழிக்கச் சிரமப்படும் வயதானவர்கள்.
    * ஹைட்ரேஷன் தெரப்பி (உடலில் நீர் இழப்பு ஏற்பட்டவருக்கு ஆற்றலை அதிகரிப்பதற்காக தரப்படும் சிகிச்சை) செய்ய உள்ளவர்கள்.



    னிமாவுக்கு முன்…

    எனிமா கொடுப்பதற்கு முந்தைய தினம் மருத்துவர் கூறும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முடிந்தால், ஏதேனும் பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் இருக்கலாம். வீட்டில் எடுத்துக்கொள்வதாக இருந்தால், முதலில் வயிற்றில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். நம் உடலில் வாயு பிரிந்தால், இந்த இயக்கம் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம்.

    அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்வது சரியா?

    குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் குடலைச் சுத்தம் செய்வதற்காக எனிமா எடுத்துக்கொள்வது தவறு அல்ல. ஆனால், அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆசனவாயிலும், உள்ளே இருக்கும் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தச் செயற்கையான சுத்திகரிப்பு முறையை முழுமையாகச் சார்ந்து இருப்பதும் தவறான பழக்கம். நமது ஆசனவாய் சுருங்கி விரியும் தன்மை உடையது. அடிக்கடி எனிமா எடுக்கும்போது இந்தத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், எனிமா இல்லாமல் தானாகவே மலத்தை முழுமையாக வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. முதலில் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்கள் கடைப்பிடித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது.

    யாருக்கு எனிமா கொடுக்கக்கூடாது?

    * மூலம் பிரச்னை உள்ளவர்கள்
    * இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள்
    * சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளவர்கள்.
    * மலக்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள்.
    Next Story
    ×