search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் நலம் பேண வேண்டும்
    X

    உடல் நலம் பேண வேண்டும்

    உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும்.
    ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார் அவ்வையார். மனித பிறவியில் உயிரின் கூடாகவும், உணர்வுகளின் வீடாகவும் விளங்குவது உடலாகும். உடல் நலமின்றி போனால் உயிர்ப்பறவை போய்விடும். அதனால் தான் உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பார் திருமூலர். இந்த உலகில் நீண்ட நாள் வாழ உடல்நலம் பேணல் வேண்டும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி.

    நோயில்லா வாழ்வே வாழ்வு, நோயுடைய வாழ்வு எத்தன்மைதாயினும் அது வாழ்வாகாது. உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும். நாம் வாழ வீடு கட்டிக்கொள்கிறோம்.

    நோய் பரவாமலிருக்க வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். அதுபோல் உயிர் வாழ உடல் தேவை. அந்த உடலை பேணிப் பாதுகாத்தால் நோயின்றி நீண்டநாள் வாழலாம். அதற்கு நன்முறைகள் சிலவற்றை கடைப்பிடித்தல் அவசியமாகிறது. மனிதன் வாழ்வாங்கு வாழ இன்றியமையாதவை மூன்று, அவை உணவு, உடை, உறைவிடம் என்பன. இம்மூன்றையும் நன்கு பார்த்து கொள்ளவேண்டும். பசித்த பின் புசி என்பது நல்ல அறிவுரை. பசியோடு உண்ணச் செல். பசி அடங்குவதற்குள் எழுந்துவிடு என்பார் கவியரசு வைரமுத்து. முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து உண்டால் உடம்புக்கு மருந்து தேவையில்லை என்பார் திருவள்ளுவர்.



    சிலர் சுவைக்கு அடிமைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்கின்றனர். அளவுக்கு மிஞ்சினாலும் அமுதம் நஞ்சாகும் அன்றோ? வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர, உண்பதற்காக வாழக்கூடாது. நீரும், காற்றும், ஒளியும் மனிதனை வளர்க்கும் தெய்வங்கள் ஆகும். தூய நீரில் நீராடி, காய்ச்சி வடிகட்டிய நீரை பருகி உடலை பேண வேண்டும். உண்ண தகுந்த உணவுப்பொருட்களை உண்ண வேண்டும்.

    ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்பது திருவள்ளுவர் கூற்று. கந்தையானாலும் கசக்கி கட்டு. ‘கூழானாலும் குளித்துக் குடி’ என்பன பழமொழிகள். நீராடிய பின் தூய உடை உடுத்தவேண்டும். நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்கவேண்டும். காற்றும், சூரிய ஒளியும் தாரளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமையவேண்டும்.

    மேலும் உடலின் வலிமைக்கு உடற்பயிற்சி அவசியம். அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். உடலின் கழிவுப்பொருட்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு, நீச்சல், நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடல். அதனை காப்பதே நம் முதற்கடமை. சுவரை வைத்தே சித்திரம் வரைய வேண்டும். உடலை வைத்துதான் உயிரை பேணவேண்டும். உடலை பேணுவோம். உயிரை காப்போம்.
    Next Story
    ×