search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவின் உண்மைகள்: தெரிந்ததும்.. தெரியாததும்..
    X

    உணவின் உண்மைகள்: தெரிந்ததும்.. தெரியாததும்..

    உலகில் எதையும் விலைகொடுத்து வாங்க முடியும். ஆனால் ஆரோக்கியத்தை மட்டும் எவ்வளவு விலைகொடுத்தும் வாங்க முடியாது. அளவோடு சாப்பிட்டால் வளமான ஆரோக்கியத்துடன் வாழலாம்.
    ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டியது, உணவில்தான். வயது, உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு உணவின் தேவையை தீர்மானிக்கவேண்டும். ‘அதிகமான அளவு உணவு சாப்பிட்டால் அதிக ஆரோக்கியம் கிடைக்கும்’ என்ற கருத்து சிறு பருவத்தில் இருந்தே குழந்தைகளிடம் உருவாக்கப்படுகிறது. அது தவறானது. பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்குமே சரிவிகித சத்துணவுகள் தேவை. போதுமான அளவில், சரியான நேரத்தில், சரியான உணவு உட்கொள்ளப்படவேண்டும்.

    இப்போது குளிரூட்டப்பட்ட அறைக்குள்தான் மனித வாழ்க்கை நடைபெறுகிறது. இரவில் ஏ.சி. படுக்கை அறைக்குள் தூங்கு கிறார்கள். காலையில் விழித்து குளிரூட்டப்பட்ட ‘ஜிம்’மில் உடற் பயிற்சி செய்கிறார்கள். அடுத்து அலுவலகம் செல்லும் காரிலும்- வேலை பார்க்கும் அலுவலகத்திலும்- பொழுதுபோக்கிற்காக செல்லும் வெளியிடங்களிலும் ஏ.சி.தான். இது மனித வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல. மனித உடலில் சூரிய ஒளிபடவேண்டும். அதன் மூலம் ‘சன்ஷைன் வைட்டமின்’ எனப்படும் ‘வைட்டமின்-டி’ கிடைக்கும். இந்த சத்து எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கும்- மூளை, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம்.

    இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள மருத்துவ ஆய்வுபடி, கிட்டத்தட்ட 40 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த பரிசோதனை மூலம் எந்த அளவுக்கு பற்றாக்குறை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    வைட்டமின்- டி பற்றாக்குறை பருவத்திற்குதக்கபடி பாதிப்பை உணர்த்தும். குழந்தைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது ரிக்கட்ஸ் என்ற நோயாக வெளிப்படும். நடுத்தர வயதில் ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோயாகத் தோன்றும். இந்த பாதிப்பு கொண்டவர்கள் கீழே விழுந்தால், எலும்பு உடைந்துவிடும். பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு முழுமையாக நின்றுபோகும் மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இந்த எலும்பு அடர்த்தி குறைபாட்டு நோய் தோன்றும்.



    கால்சிய சத்து குறைபாடு ஏற்பட்டாலும் எலும்பு பலவீனமாகும். இதற்கு காரணம் என்னவென்றால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது, உடல் தனது இயக்கத் தேவைக்காக எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்ளும். அப்போது எலும்புகள் பலவீனமாகி, லேசான தாக்குதலுக்கே ஒடிந்துபோய்விடக்கூடும். வைட்டமின்-டி மற்றும் கால்சியத்திற்கு தொடர்பு இருக்கிறது. ஒன்றில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் மற்றொன்றில் எதிரொலிக் கும்.

    வைட்டமின்-டி பற்றாக்குறை உங்களிடம் இருந்தால், அதற்கான அறிகுறிகள் தென்படும். எதிலும் ஆர்வமில்லாத நிலை, சோர்வு, உற்சாகமின்மை, மனதில் தெளிவின்மை போன்றவை அதன் அறிகுறிகள். சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருந்தால் செரட்டோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு குறையும். அதனால் மனநிலையில் தெளிவற்ற நிலை தோன்றலாம். அதுவே சில நேரங்களில் மனஅழுத்தம் உருவாகவும் காரணமாகிவிடும்.

    வைட்டமின்-டி பற்றாக்குறையை சீர்செய்ய சூரிய கதிர்களை எதிர்கொள்வது அவசியம். அப்போது தங்கள் சரும நிறத்தையும் கவனத்தில்கொள்ளவேண்டும். சிவப்பு நிறம் கொண்டவர்கள் மீது பத்து நிமிடங்கள் சூரியகதிர் விழுந்தால்போதும். கறுப்பு நிறம் கொண்டவர்கள் மீது குறைந்தது 20 நிமிடங்கள் சூரியகதிர்கள் படவேண்டும். வைட்டமின்-டி பற்றாக்குறை கறுப்பு நிறம் கொண்டவர்களிடமே அதிகம் காணப்படுகிறது. காலை எட்டு மணிக்குள் வெயில் உடலில்படவேண்டும். வயதாகும்போது சூரியனில் இருந்து உடல் வைட்டமினை பெறும் வேகம் குறைந்துவிடும். அந்த குறைபாட்டை சரிசெய்ய டாக்டரின் ஆலோசனைப்படி வைட்டமின் சப்ளிமென்ட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்.

    நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உணவு மூலம் கிடைக்கும். ஆனால் வைட்டமின்-டி சத்து கொண்ட உணவுப் பொருட்கள் குறைவாகவே இருக்கின்றன. சில வகை மீன்கள், பால், பால் வகைப் பொருட்கள், முட்டைவெள்ளைக்கரு, காட்லிவர் ஆயில், கோழியின் ஈரல், தானியங்கள், பச்சை நிற கீரைகள், காளான் போன்றவைகளில் இந்த சத்து இருக்கிறது.



    இப்போது பலரும் உடல் எடையை குறைப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். எந்தெந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எவ்வளவு சாப்பிடவேண்டும்? என்ற கணக்கினை அவரவர் இஷ்டத்துக்கு உருவாக்கி, ‘டயட்’டை மேற்கொள்ளக்கூடாது. ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ அளவீடுக்கு தகுந்தபடி அதற்குரிய நிபுணரின் ஆலோசனைப்படி ‘டயட்’டை உருவாக்கவேண்டும். பெண்களுக்கு அவர் களது உடல் எடைக்கு தகுந்தபடி கொழுப்பும் தேவை. கொழுப்பு அதிகமாகிவிட்டால் உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் குறைக்கவேண்டும். கொழுப்பு குறைந்தால் உணவு மூலம் மேம்படுத்தவேண்டும்.

    பெண்கள் அனைவருமே தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை அதிகம் கொண்ட சிலர், ‘தான் சாதம் சாப்பிடுவதில்லை. சாக்லேட் மட்டுமே சாப்பிடுகிறேன்’ என்கிறார்கள். அவர்கள் தவிர்க்கும் உணவைவிட சாப்பிடும் உணவில் கலோரி அதிகம் இருந்துவிடும். ஒரு பார் சாக்லேட்டில் 200 கலோரி இருக்கிறது. 100 கிராம் சிப்ஸ்சில் 350 கலோரியும், பழுத்த நேந்திரம் பழம் ஒன்றில் 150 கலோரியும் இருக்கிறது. இதை எல்லாம் கணக்கு பார்க்காமல் சாப்பிட்டால், உடலில் கலோரி அதிக மாகி கொழுப்பு அளவு உயர்ந்துவிடும்.

    உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினிக்கிடப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதனால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு, உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும். எந்த உணவு, எந்த அளவில், எந்த நேரத்தில் சாப்பிடவேண்டும் என்பதை வரைமுறைப்படுத்துவதுதான் ‘டயட்’ என்பதை மனதில் அனைவரும் பதியவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு உணவு சாப்பிடாவிட்டால் சருமத்தில் சுருக்கம், தசை பலகீனமாகி தொங்குதல் போன்றவை தோன்றிவிடும்.

    எவ்வளவு வேலை இருந்தாலும், எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் காலை உணவை தவிர்த்துவிடக்கூடாது. முழுமையாக சாப்பிடவேண்டும். காலை உணவு சாப்பிடாவிட்டால், மூளையின் இயக்கம் குறைந்துவிடும். காலப்போக்கில் உடலும் மிக பலகீனமாகிவிடும். மதிய உணவு சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும். பெயரளவுக்கு எதையாவது கொரிப்பது என்பது சரியான தல்ல. அதுபோல் மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு அவஸ்தைபடவும் கூடாது. இப்போது இரவு உணவு என்பது மிக மோசமான கலாசாரமாக இருக்கிறது.

    விருந்துகளும், விழாக்களும், சந்திப்புகளும் இரவு நேரத்தில்தான் நடக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் முடிவதற்கு இரவில் அதிக நேரமாகிவிடுகிறது. அதன் பின்பு சாப்பிடத் தொடங்கு கிறார்கள். அவசரஅவசரமாக அளவுக்கு அதிகமான சாப்பாட்டை உட்கொள்கிறார்கள். இரவு உணவில் மிகுந்த கவனம் தேவை. ஏன்என்றால் விழித்திருக்கும் நிலையில் உடலில் ஜீரணம் நடப்பதைவிட பாதி அளவே இரவில் ஜீரணமாகும். அதனால் இரவில் எட்டு மணிக்கு முன்பே அரை வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுங்கள்.

    உலகில் எதை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கலாம். ஆனால் ஆரோக்கியத்தை மட்டும் எவ்வளவு விலைகொடுத்தும் வாங்க முடியாது. அளவோடு சாப்பிட்டால் வளமான ஆரோக்கியத்துடன் வாழலாம்.

    முனைவர் ஜே.தேவதாஸ் ரெட்டி, சென்னை.
    Next Story
    ×