search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரத்த, பித்த நோய்களை குணமாக்கும் நெல்லிக்காய்
    X

    ரத்த, பித்த நோய்களை குணமாக்கும் நெல்லிக்காய்

    நெல்லிக்காயை பச்சை காயாக சாப்பிடும் போது தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 நெல்லிக்காய்கள் வரை சாப்பிடலாம்.
    திரிபலா சூரணத்தில் பயன்படுத்தப்படும் இன்னொரு முக்கிய காய் நெல்லிக்காய்.

    ஆயுர்வேதத்தில் இதனை வயஸ்தா என்று கூறுவார்கள். வயஸ்தா என்றால் மூப்படையாமல் காக்கச்செய்வது என்று பொருள். இதற்கு சிவா என்றும், பலம் என்றும் பெயருண்டு. தாத்ரீ பலம் என்றும் அழைப்பார்கள். அமிர்தத்துக்கு சமமானதால் அமிர்தா என்ற பெயரும் உண்டு. ரத்த நோய்கள், பித்த நோய்கள் போன்றவற்றையும் குறைக்கும்.

    கல்ப மருந்து, ரசாயன மருந்து, பித்தத்தை தணிப்பது. 5 ரசங்களை உடையது, உப்பு சுவை இல்லாதது. நெல்லிக்காயை மஞ்சள் பொடியுடன் சேர்த்து சாப்பிட பிர மேகம் கட்டுப்படும். ஸரம் எனும் மலத்தை இளக்கும் குணம், இதற்கு உண்டு. சியவனபிராச ரசாயனம் இதன் மூலம் செய்யப்படுகிறது.

    முடிவளர்க்கும் எண்ணைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. எனவே நெல்லிக்காய்க்கு கேஷ்யம் எனும் குணம் உண்டு. ரத்த பித்தம் எனும் ரத்த கசிவு நோய்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

    முக்குற்றத்தையும் இது மாற்றும். தாத்ரி அரிஷ்டம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு வேளை உணவு உட்கொள்ளும் போது தொடக்கத்திலும், நடுவிலும், இறுதியிலும் ஒருவன் இதனை உட்கொண்டு வந்தால் நோயின்றி வாழ்வான் என ராஜவல்லப நிகண்டு சொல்கிறது.

    நெல்லிக்காய் பொடியை நெல்லிக்காய் சாறு கொண்டு பாவனை செய்து சர்க்கரையும், தேனும், நெய்யும் சேர்த்து லேகியம் போல் சாப்பிட்டு வர நீண்ட ஆயுளுடன் சிரஞ்சீவியாக வாழ முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லி, யுபோர்பியேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது இந்திய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது. நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற இனங்கள் உண்டு.

    மற்ற எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிக அளவு வைட்டமின் சி நெல்லிக்காயில் உள்ளது. ஒரு நெல்லியில் தோடம்பழம் எனப்படும் புளிப்புப் பழங்கள் முப்பதில் உள்ள அளவுக்கு இணையாக வைட்டமின் சி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்றாடம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.



    மேலும் மலை நெல்லிக்காயில் பாலிஃபினால்கள், கனிம சத்துக்களான இரும்பு சத்து, துத்தநாகம், வைட்டமின்களான கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன. அருநெல்லியில் இந்த அளவுக்கு மருத்துவ குணம் இல்லை. மிகச்சிறிய அளவுக்கே உள்ளது. கருநெல்லி என்னும் தோப்பு நெல்லி என்ற காய் தான் சத்து நிறைந்தது. இது பார்க்க உருண்டையாக இருக்கும்.

    ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நமது நாட்டில் இரும்பு சத்து குறைபாடு உடையவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் நெல்லிக்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த குறைபாட்டில் இருந்து மீளலாம். வைட்டமின் சி நெல்லிக்காயில் அதிகமாக இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்பு சத்தை ஈர்த்து உடலுக்கு கொடுக்கும்.

    வேக வைத்தாலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை சாப்பிடும் போது நெல்லிக்காயையும் கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் தருவதாக அமையும்.

    நெல்லிக்காயை பச்சை காயாக சாப்பிடும் போது தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 நெல்லிக்காய்கள் வரை சாப்பிடலாம். நெல்லிக்காயில் கால்சியம் சத்தும் நிறைய இருப்பதால் எலும்புகள் உறுதிப்படும். ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாகும்.

    தலைமுடி கருமையாக வளர நெல்லிக்காய் பயன்படுகிறது. கூந்தலை செழிப்பாக வளர வைக்கவும், இதற்காக தயாரிக்கப்படும் எண்ணைகளிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. அதோடு தலை சாயம் தயாரிக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.

    தினமும் 4 நெல்லிக்காய் சாற்றுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை குறைபாட்டை கட்டுக்குள் கொண்டு வரலாம். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றுடன் இஞ்சி சாறு பருகி வந்தால் தேவையற்ற எடை குறைந்து ‘சிக்’ கென்ற உடல் தோற்றத்தை பெறலாம். நெல்லிக்காயை துவையல் செய்தும் சாப்பிடலாம்.

    சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நெல்லிக்காயுடன் துவையல் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.
    கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

    டாக்டர் எல். மகாதேவன்.
    தெரிசனங்கோப்பு
    செல்:9282405680
    Next Story
    ×