search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்
    X

    இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்

    மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்றான, இடை விடாது துடித்துக் கொண்டிருக்கும் இதயம் பற்றிய சிறப்பம்சங்களை காண்போம்.
    மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இடை விடாது துடித்துக் கொண்டிருக்கும் இதயம் பற்றிய சிறப்பம்சங்களை காண்போம்..!

    * கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். கைக்குள் அடங்கும் இதன் அளவு நீளவாக்கில் 15 சென்டி மீட்டரும், குறுக்கு வாக்கில் 10 சென்டி மீட்டரும் இருக்கும். இதயம் மிகவும் வலிமையான தசைகளைக் கொண்டது.

    * ஆணின் இதயம் சராசரியாக 300 முதல் 350 கிராமும், பெண்ணின் இதயம் 250 முதல் 300 கிராமும் எடை கொண்டிருக்கும். உடலின் இயக்கத்துக்குத் தேவையான இன்றியமையாத பணியைச் செய்யும் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மார்பு எலும்புக்கூடு பாதுகாக்கிறது. முன்பக்கம் நெஞ்சு எலும்பு, பின்பக்கம் முதுகு எலும்பு, பக்கவாட்டில் விலா எலும்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு இதயத்தைக் காக்கின்றன.

    * இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதனுடன் இணைந்த உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் ( LIFE GIVERS ) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள் ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் எடுத்துச் செல்கின்றன.

    * சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DI-SPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன.

    * இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.

    * இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா, அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே வழி முறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும் அரை நொடியை இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

    * இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை (கரோனரி தமனிகளை) ஆங்கிலத்தில் (CO-RONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இப்பெயர் வந்ததற்கு காரணம் லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம் அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் முட்கள் போன்ற அமைப்புடைய இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது.
    Next Story
    ×