search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊஞ்சல்
    X

    ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊஞ்சல்

    ஊஞ்சலில் ஆடுவது மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை மறையச் செய்து நேரடியான எண்ணங்களை அதிகப்படுத்துகிறது.
    நம் ஊர்களில் பாரம்பரிய வீடுகளில் வரவேற்பறையில் பெரிய மரப்பலகையில் கலைநயத்தோடு செய்யப்பட்ட ஊஞ்சல்கள் தொங்குவதை கண்டிருக்கிறோம். இந்த ஊஞ்சல்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்லத்தொடங்கியிருக்கின்றன. ஆக, நமது முன்னோர்கள் ஊஞ்சலை வெறும் அழகுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அமைக்கவில்லை என்பது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.

    பொதுவாக நம் வீடுகளில் ஊஞ்சல் அமைக்கப்பட்டதற்கு ஆன்மிக காரணமே சொல்லப்பட்டது. செல்வங்களை அள்ளித்தரும் தேவதைகள் நம் வீட்டுக்குள் நுழையும்போது அவர்களை மகிழ்விக்கவே வரவேற்பறையில் ஊஞ்சல் அமைக்கப்பட்டது. தேவதைகள் ஊஞ்சலில் அமர்ந்து ஆட பிரியப்படுவார்கள் என்றும், அப்படி ஊஞ்சல் இருக்கும் வீடுகளுக்கு செல்வமும் ஆரோக்கியமும் தருவார்கள் என்பதும் அன்றைய நம்பிக்கை.

    திருமணம் முடிந்து வீட்டுக்குள் நுழையும் மணமக்களை இந்த ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிடுவார்கள். ஊஞ்சலில் ஆடுவது மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை மறையச் செய்து நேரடியான எண்ணங்களை அதிகப்படுத்துகிறது. இதனால்தான் புதுமணத்தம்பதிகளை ஊஞ்சலில் அமர்த்தி ஆட வைத்திருக்கிறார்கள்.

    ஊஞ்சல் மனசோர்வை முற்றிலுமாக நீக்கி விடுகிறது. ஊஞ்சலில் வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுவடம் பலம் பெறுகிறது. ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இந்த ரத்த ஓட்டம் பரவி மூளைக்கும் செல்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்படைகிறது. சிந்தனை ஆற்றல் கூடுகிறது.

    தற்போது பலர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பார்க்கும் வேலையே செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கழுத்துவலி, முதுகு வலி, முதுகு வளைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர்கள் தினமும் அரை மணி நேரம் ஊஞ்சலில் ஆடினால் போதும் மேற்கண்ட பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தி ஆகிவிடுகின்றன.

    வீட்டினுள் ஊஞ்சல் இருப்பதைவிட தோட்டத்தில் இருப்பது மிகுந்த பலனைத் தரும் என்கிறார்கள். அங்கு சுத்தமான பிராணவாயு கிடைப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. நல்ல ரத்த ஓட்டம் இதயத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சாப்பிட்டு முடிந்ததும் அரைமணி நேரம் மெதுவாக ஊஞ்சலில் ஆடினால் உணவு நல்ல செரிமானம் ஆகும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

    வீடுகளில் இடப்பற்றாக்குறை உள்ளவர்கள் கூட வாங்கி பயன்படுத்தும் வகையில் நவீன ஊஞ்சல்கள் வந்து விட்டன. எனினும் குறுகலான இடத்தில் ஊஞ்சலை அமைக்கக் கூடாது. காற்றோட்டமுள்ள இடங்களில் ஜன்னலுக்கு அருகில் அமைப்பது நல்லது. பால்கனி மற்றும் படுக்கை அறையில் அமைக்க மூங்கிலால் ஆன ஊஞ்சல் ஏற்றது. இவை கோடைகாலத்தில் குளிர்ச்சியை தரும்.

    தோட்டங்களில் உலோகங்களால் ஆன ஊஞ்சலை அமைப்பது நல்லது. வீட்டின் வரவேற்பறைக்கு இன்றைக்கும் ஏற்றவை, மரப்பலகையால் ஆன ஊஞ்சல்கள்தான். வீடுகளில் மீண்டும் ஊஞ்சல் அமைப்போம். ஆரோக்கியத்தை மீட்போம்.!
    Next Story
    ×