search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உயிர்காக்க ரத்தம் கொடுப்போம்
    X

    உயிர்காக்க ரத்தம் கொடுப்போம்

    ரத்ததானம் செய்வதன் மூலம் புதிய ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடுவதனால் மேலும், உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கலாம்.
    இந்தியாவில் தேசிய ரத்ததான தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்படுகிறது.

    ரத்ததானம் செய்வதினால் யாருக்கும் எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு, ரத்ததானம் செய்தால் உடல்நிலை பாதிக்குமோ என்கிற பயம் இருப்பின் அது அவசியம் இல்லாதது. அதேபோல் ரத்ததானம் செய்தால் உடல் எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும் சரி அல்ல.

    ரத்ததானம் செய்வதன் மூலம் புதிய ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடுவதனால் மேலும், உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கலாம்.

    18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். குறிப்பாக உடல் எடை 45 கிலோ மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் ரத்ததானம் செய்யலாம்.

    மது அருந்தியவர்கள் 24 மணி நேரத்திற்கு ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் 6 மாதங்கள் வரையும், சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் 3 மாதங்கள் வரையும் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பால்வினை நோய் மற்றும் மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் ஓராண்டு வரை ரத்ததானம் செய்யக்கூடாது.

    காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 5 ஆண்டுகள் வரை ரத்ததானம் செய்யக்கூடாது.

    ரத்தம் ஏற்றிக்கொண்ட நபர்கள் ஓராண்டு வரை ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

    இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள், பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், போதை ஊசிப்பழக்கம் உள்ளவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

    பொதுவாக ஒரு நபரிடம் இருந்து 350 மி.லி. ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும் மொத்தமாக 20 நிமிடம் மட்டுமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம். தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம், இதய துடிப்பு போன்றவை சரிவர இருக்காது என்பதால் அவர்கள் ரத்தம் தானம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தியாவில் ஆண்டுக்கு 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அதில் பாதி அளவு மட்டுமே கிடைக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்படும். அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது என்பது விடைகாண முடியாத புதிராக உள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் ரத்த தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த வங்கிகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கும், அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம் கிடைக்காமல் பலர் உயிர் இழப்பது என்பது துர்பாக்கியமானது.

    ஆகையால் இந்த நிலை தொடராமல் இருக்க சாதி, சமய, மொழி, இன பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். அதற்கான மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டும்.

    தானத்தில் சிறந்தது ரத்ததானம். இது என் மொழி. பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகை உள்ளன. பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால் ரத்ததானம் ஒன்றே சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என உறுதி மொழி எடுத்து ஆரோக்கியத்துடன் உள்ள ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்வோம். 
    Next Story
    ×