search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குளிர்ச்சியும் கண்களை தழுவட்டுமே
    X

    குளிர்ச்சியும் கண்களை தழுவட்டுமே

    அழகு மற்றும் ஸ்டைலிற்காக கண்ணாடியை தேர்ந்தெடுக்காமல் நம் முகத்தின் அமைப்பிற்கு ஏற்ப கண்களை முழுதாக மறைக்கும் அளவில் கண்ணாடியை தேர்வு செய்ய வேண்டும்.
    கோடைக்காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் கதிரவனின் கோபக்கனல்கள் தாக்கும் என்பது தெரிந்ததே. அதனை அறிவோடும் தெளிவோடும் அனுபவத்தோடும் முறியடித்து தன் உடலை பாதுகாத்துக் கொள்வதே மனித அறிவின் சிறப்பு. அந்த வகையில் மிகவும் நுண்மையான முக்கிய உறுப்பான கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். கண்களை சூரிய வெப்பத்திலிருந்து காப்பதில் குளிர்கண்ணாடிகளுக்கு முக்கிய பங்குண்டு. குளிர் கண்ணாடியை தேர்ந்தெடுப்பதில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன் கண்களை சூரிய வெப்பம் எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்.

    அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது சூரிய வெப்பத்தினால் கண்களின் வெள்ளைப் பகுதியில் அழற்சி ஏற்பட்டு சிவந்து விடும். கண்களில் திரவக்கசிவும் ஏற்படும். கண்ணின் கருவிழிகள் சூரிய வெப்பத்தின் அல்ட்ரா வயலட் கதிர்களால் எரியத்துவங்கும். மேலும் சூரிய ஒளியின் அதிக வெளிச்சத்தால் கண்களை சுருக்கி பார்க்க வேண்டியிருப்பதால் கண்களைச் சுற்றியுள்ள பூந்தசைகளில் அதிக சுருக்கம் ஏற்படுகிறது. அதிகளவிலான சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பம் கண்களில் புரை ஏற்படுவதையும் துரிதமாக்குகிறது.

    மேலும் அது கண்களின் பின்புறமுள்ள விழித்திரையான ரெடினாவையும் பாதிக்கிறது. அத்துடன் கண்களில் திசுக்களின் தேவையற்ற வளர்ச்சி (படலம்) ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. கண்களின் மேற்புறம் உள்ள மெல்லிய படலத்தில் உள்ள நெகிழும் தசைநார்கள் (ஸ்க்லீரா) கெட்டிப்பட்டு இறுகி விடுவதற்கும் காரணமாகிறது.

    எனவே தான் வெயிலில் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக குளிர் கண்ணாடி அணிவது அவசியம். குழந்தைகளுக்கும் இது மிகவும் இன்றியமையாததாகும்.

    குளிர் கண்ணாடி வாங்கும்போது அது சூரிய ஒளியின் அல்ட்ரா வயலட் கதிர்களை தடுக்கும் தன்மை கொண்டதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வசதி இல்லாத குளிர் கண்ணாடி பிரயோஜனமே இல்லை.

    குளிர் கண்ணாடி கண்களை முழுவதுமாக மறைக்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும். அழகு மற்றும் ஸ்டைலிற்காக கண்ணாடியை தேர்ந்தெடுக்காமல் நம் முகத்தின் அமைப்பிற்கு ஏற்ப கண்களை முழுதாக மறைக்கும் அளவில் கண்ணாடியை தேர்வு செய்ய வேண்டும். கண் இரப்பைகளில் படாமலும் கண்களிலிருந்து தள்ளியும் இல்லாமல் புருவத்தில் பதிந்து இருக்குமாறு கண்ணாடியின் வடிவம் இருக்க வேண்டும். கண்களை நன்கு மூடும் கண்ணாடி சூரிய கதிர்களை மட்டுமின்றி, மண், தூசி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் மகரந்தம் போன்றவற்றிலிருந்தும் கண்களை காக்கும்.

    போலரைஸ்ட் கண்ணாடிகள், கண்களை கூசும் வெளிச்சத்திலிருந்து காப்பாற்றுகிறது. கடற்கரை, வெண்மணல், தண்ணீர் பரப்பு, பனிக்கட்டி போன்றவற்றின் மேல் படும் சூரிய ஒளி பிரிபலிப்பாகும்போது அதிக வெளிச்சத்துடன் வந்து கண்களை தாக்கி கண்களை கூசச் செய்யும். இந்த பிரச்சினையை போலரைஸ்ட் கண்ணாடி அணியும்போது முழுமையாக தவிர்க்கலாம்.

    குளிர் கண்ணாடியின் நிறம் என்பது நம் விருப்பத்திற்கு ஏற்பவே தேர்ந்தெடுக்கலாம். அதிக அடர்த்தியான நிறங்கள் (கருப்பு-பிரவுண்) சூரியஒளியை பெரிதும் தடுக்கும் என்று கூற முடியாது. கண்ணாடியின் யுவி பாதுகாப்பு அம்சம் மட்டுமே கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. எனவே எந்த நிறமானாலும் அதில் யுவி பாதுகாப்பு இருக்கிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

    குளிர் கண்ணாடி, கண்ணாடியா? பாலி கார்பனேட்டினால் ஆனதா, ப்ளாஸ்டிக்கா? எது சிறந்தது? இதற்கான விடையும் உங்கள் விருப்பம்தான். அணிந்து பார்க்கும்போது உங்களுக்கு எது நன்றாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்யலாம். விலை கூடுதலான கண்ணாடி சிறந்தது என்பதும் உண்மையல்ல. விலைக்கும் தரத்திற்கும் பெரிய தொடர்பில்லை குளிர் கண்ணாடிகளை பொறுத்தவரையில்.
    Next Story
    ×