search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்
    X

    விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

    தினமும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுவதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும்.
    கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும். நம் உடலையும் மனதையும் ஒருங்கே தயார்ப்படுத்தும் காலை நேரப் பயிற்சிகளை பார்க்கலாம்.

    ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)

    தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:


    சீரான இதயத் துடிப்புக்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. காலின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

    லஞ்சஸ் (lunges exercise)

    தரையில் நேராக நிற்க வேண்டும். பின், இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்து வைக்க வேண்டும். இப்போது, வலது காலை சற்று முன் நோக்கி மடக்கி, இடது காலால் முட்டியிட்ட நிலையில் இருக்க வேண்டும். சில விநாடிகள் கழித்து, படிப் படியாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று, இடது காலை மடக்கி, வலது காலை முட்டி போட்ட நிலையிலும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.



    பலன்கள்:

    உடலுக்கு அதிகமாக உள்ள கலோரியின் அளவைக் குறைக்கிறது. கால் மற்றும் முட்டியின் வலு அதிகரிக்கும். கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும்.

    ஏரோ பாக்ஸிங் (Aero Boxing)

    இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்கு தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பது போல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும். பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக அகட்டி வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    கைகளில் உள்ள தசை உறுதியாகிறது. தோள்பட்டை உறுதியாகும். முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலின் நிலைத்தன்மை மேம்படும்.
    Next Story
    ×