search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் வளர்க்க... உயிர் வளர்க்க பிராணாயாமம்
    X

    உடல் வளர்க்க... உயிர் வளர்க்க பிராணாயாமம்

    மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, உட்புகும் காற்றானது, பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்ற ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப் புரிகின்றது.
    இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.  

    'தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது’ என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச் செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும், யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே காலமும் ஓடுகிறது.  

    ''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில்  இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் 'பிராணாயாமம்’.

    ''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப் 'பிராணாயாமக் கலை’. தீர்க்கமான சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது, உள்ளே வருவதும் வெளியே போவதும் நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை கொள்ளாது.  

    துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும், வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும், சோர்வாக இருக்கும்போதும் ஒரு வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும் மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.  

    இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர் உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த உணர்வு தேவையோ அந்த உணர்வு உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர்.

    சுவாசமானது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில் இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும் தன்மையும் இருக்கும்படியாக மூச்சை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக் கண்டுபிடித்தனர்.  

    உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி, சுவாசத்தையும் மூச்சையும் ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய பிராணாயாமக் கலையை அறிந்து சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன் இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே பிராணாயாமம் உதவுகிறது.

    சுவாசத்தை நாம் மூக்கு வழியாக உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம் வலம் பிரியும் குழல்களின் வழியே நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால் 1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!

    சுவாசிக்கும் ஐந்து இடம்

    மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, உட்புகும் காற்றானது, பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்ற  ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப் புரிகின்றது.

    1. பிராணன்:  உடலின் மேலே இயங்கும் இது 'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது.  மேலும், நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும் இயக்குகிறது.

    2. அபானன்: கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும் மலத்துளையே இதனுடைய இடம்.

    3. உதானன்:
    உடலை எழுந்து நிற்கச் செய்வது, மேல் நோக்கி இயங்கும். உணவை விழுங்குதல், உறங்க வைப்பது. தொண்டையில் இருக்கும் இது, உயிர் பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப உடலைப் பிரிக்கிறது.

    4. சமானன்: உணவைச் செரித்து, சக்தியை ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.

    5. வியானன்: ரத்த ஓட்டத்தை நடத்துகிறது. உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை செய்கிறது.
    Next Story
    ×