search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அப்பாவும் நானும் - உறவின் இடைவெளி
    X

    அப்பாவும் நானும் - உறவின் இடைவெளி

    நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக் கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
    இக்காலத்துப்பிள்ளைகள் பெரியோர் சொன்னபடி கேட்பதில்லை. இஷ்டப்படி நடக்கிறார்கள். சிறுவயதில் நாம் இப்படியா இருந்தோம். ஒவ்வொரு காலத்திலும் பெரியவர்களின் புலம்பல். இதுதான் தலைமுறை இடைவெளி என்பது.

    ஒவ்வொரு தலைமுறைக்குமே பொருந்தும். ஏனெனில் நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக் கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம். இப்போது குழந்தைகள் (அது ஆணோ, பெண்ணோ) குழந்தைக்கு 4 வயதாகும் போது ‘ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா? எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது. அதே குழந்தை. 6 வயதில்: “அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத விஷயமே கிடையாது.

    10 வயதில்: ‘அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர். எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத்தெரியவில்லையே.
    12 வயதில்: “நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம் நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது.....!

    16 வயதில்:‘சே! அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. காலத்துக்குத்தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!
    18 வயதில்: “இதென்ன வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.



    20 வயதில்: “அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம் வாழ்ந்தாளோ?”
    25 வயதில்: “எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்! எப்போதுதான் அப்பா உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ. கடவுளே!

    30 வயதில்: (ஒரு குழந்தை பிறந்ததும்) ஓ! வரவர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே!
    நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்!

    40 வயதில்: ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா? இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை எப்படிக் கண்டிப்பு கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது அதிசயமாகவே உள்ளது.

    45 வயதில்: என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர், அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்குப் கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.



    50 வயதில்: இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட வேண்டிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை) வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.

    55 வயதில்: அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில் சந்தேகமில்லை.

    60 வயதில்: (கண்ணீருடன்) என் அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.

    இளைஞர்களே, யுவதிகளே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை தாயிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்களும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ ஆவீர்கள் அல்லவா?

    தயாரித்தவர் :
    நா.பிரசன்னம்,
    திருச்சி-620 001. செல்: 94880 19015.
    Next Story
    ×