search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இந்த தீபாவளிக்கு குழந்தைகளுக்கு புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகள்
    X

    இந்த தீபாவளிக்கு குழந்தைகளுக்கு புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகள்

    இந்த ஆண்டு குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் வகையில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகளை தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
    வழக்கமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த காலங்களில் இளைஞர்களை குறி வைத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக சத்தம் தரக்கூடிய பட்டாசுகள் தயாரித்து சந்தைக்கு அனுப்பி வந்தன.

    இதற்கிடையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒலிக்கு மேல் பட்டாசு சத்தம் இருக்கக் கூடாது என்று புதிய விதிகள் அரசால் வரையறுக்கப்பட்டன. அதன் பின்னர் பட்டாசு சத்தம் வெகுவாக குறைக்கப்பட்டது. சத்தம் குறைக்கப்பட்ட உடன் பட்டாசு தயாரிப்பு அடுத்த கட்டத்துக்கு சென்றது.

    தரையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளுக்கு பதிலாக வானத்தில் வெடித்துச் சிதறும் பேன்சிரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த 5 வருடங்களாக இளைஞர்களை மட்டும் குறி வைத்து தயாரிக்கப்பட்டு வரும் பட்டாசுகளில் இருந்து ஒரு சிறிய மாறுதலுக்காக சிவகாசியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் இந்த ஆண்டு குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் வகையில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகளை தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சசி கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிறுவர்களின் ரசனை வேறு. தற்போது உள்ள சிறுவர்களின் ரசனை வேறு. கடந்த காலங்களில் தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பூ, பூஞ்சட்டி, சாட்டை, என்ற அளவில் தான் எதிர்பார்ப்புகள் இருந்தன.

    ஆனால் தற்போது குழந்தைகள் இன்னும் அதிக அளவில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் நிறுவனம் சார்பில் புதிய வகை பட்டாசுகளை உற்பத்தி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு புதிய வடிவிலான பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டோம்.



    ஒவ்வொரு புதிய தயாரிப்பும் பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய வகை வேடிக்கை வெடிகளை தயாரித்தோம். குறிப்பாக நாங்கள் தயாரித்து தற்போது சந்தைக்கு அனுப்பி உள்ள டிட்டூ, டைன்டாஸ், ஆகி என்ற ரக வேடிக்கை வெடிகள் பூந்தொட்டிகள் போல் வெள்ளி நிறத்திலும், பல வண்ணத்திலும் பூ மழையாக சிதறும்.

    அதே போல் பாப்பர், ரூட்டோ, சூப்பர்ஸ்டிக் என்ற பென்சில் வகை வேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் இருந்து வெளியேறும் சிதறல்கள் குழந்தைகள் மேல் விழுந்தாலும் எந்த காயமும் ஏற்படாது. இதே போல் கலர் பிளாஸ் என்ற வெடி போட்டோ பிளாஷ் போல் ஒளியை ஏற்படுத்தி குழந்தைகளை குஷிப்படுத்தும். ஐ-ஸ்பன் பம்பரம் போல் சத்தமிட்டபடி சுற்றும். கலர்ஸ் பின்னர், காம்போ, பூம் ஆகியவை சக்கரம் போல் தரையில் சுற்றும்.

    பிளைமிசின் கீழே இருந்து மேலே சென்று வானத்தில் சக்கரம் போல் சுற்றும். இதே போல் தரையில் சுற்றக்கூடிய ஹாட்வீல் என்ற வேடிக்கை வெடி வலது புறம் சில நொடிகளும், அடுத்து இடது புறமாக சில நொடிகளும் சுற்றி குழந்தைகளை பரவசப்படுத்தும். இவை எல்லாவற்றையும் விட யோகோ என்ற வேடிக்கை வெடி மத்தாப்பூ போல் 5 அடி உயரத்துக்கு எழுந்து பூ மழைகளை பொழியும். இந்த பூ மழையை குழந்தைகள் கைகளால் தொட்டு விளையாடலாம். இதனால் உடலில் காயம் ஏற்படாது. அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இதே போல் குழந்தைகள் எளிதில் பிடித்துக் கொளுத்தும் வகையில் 50 சென்டிமீட்டர் நீளத்தில் கம்பி மத்தாப்பூ தயாரிக்கப்பட்டு உள்ளது. லாக்ஆன், அப்லோடு போன்ற வெடிகளை வெடிக்கும் போது ஒரு முறை பற்ற வைத்தால் அது 5 வெடிகளை வெடிக்கச் செய்யும். இந்த வெடிகள் வானத்தில் 5 வண்ணத்தில் பூ மழையை தூவும். அதேபோல் ஆசிட்ரீம் என்ற வெடி சத்தம் போட்டுக்கொண்டே தரைச்சக்கரம் போல் சுற்றும். இப்படி குழந்தைகளை மகிழ்விக்க நாங்கள் பெரும் முயற்சி செய்து புதிய ரக வேடிக்கை வெடிகளை சந்தைப்படுத்தி உள்ளோம்.

    இளைஞர்களை குஷிப்படுத்தும் வகையில் 500, 1000 ‘ஷாட்’ வெடிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி உள்ளோம். இந்த புதுரக வெடிகள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமலும், அச்சம் இல்லாமலும் குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்பதால் தான் குழந்தைகளுக்காக எங்கள் தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் மற்றொரு நிறுவனம் பவர் ரேஞ்சர் என்ற புதிய வகை துப்பாக்கியை தயாரித்துள்ளது. இந்த துப்பாக்கியின் தலைப்பகுதியில் நெருப்பு வைத்தால் ஏகே.47 துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளியேறுவது போல் அடுத்தடுத்து சத்தத்துடன் தீப்பிழம்புகள் வெளியேறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த துப்பாக்கியை குழந்தைகள் அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள்.
    Next Story
    ×