search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பள்ளிக் குழந்தைகளின் உணவுத் தேவைகள்
    X

    பள்ளிக் குழந்தைகளின் உணவுத் தேவைகள்

    குழந்தைகள் சத்தான உணவை தேவையான அளவு உண்டால்தான் உடல் வளர்ச்சியடையும். ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கல்வியிலும் அவர்கள் கவனம் செலுத்தமுடியும்.
    பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் சிறுமி அவள். வீட்டில் இருந்து அவளை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கு அறுபது வயது. சிறுமியின் பெற்றோர் முப்பது வயதை கடந்து கொண்டிருக்கிறவர்கள். இருவரும் வேலைக்கு சென்றுகொண்டிருப்பவர்கள். 60, 30, 5 என்ற வயதுகளை கொண்ட மூன்று தலைமுறை அந்த வீட்டில் வசிக்கிறது.

    தினமும் காலையில் அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கும்போது, உணவு சம்பந்தமான கூச்சல் அங்கு எதிரொலிக்கும். உணவு தயாரிக்கும் பாட்டி, அவருக்கு பிடித்த, அவர் சத்து நிறைந்தது என்று நம்புகிற உணவை தினமும் தயார் செய்து, சிறுமியின் டிபன் பாக்சை நிரப்புவார். அவளோ அந்த உணவு தனக்கு பிடிக்காது, அதனால் எடுத்துச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிப்பாள். தினமும் காலையில் அங்கு அதட்டல், மிரட்டல், அழுகை எல்லாம் நடக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று இது ஒரு எடுத்துக்காட்டு. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைக்கொண்ட பல வீடுகளில், இந்த காலைநேர கலாட்டா நடந்துகொண்டிருக்கிறது.

    இந்த கலாட்டா தவிர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். ஏன்என்றால் குழந்தைகளுக்கு காலை உணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல் மதிய உணவும் முக்கியம். சத்தான உணவை தேவையான அளவு அவர்கள் மதியமும் உண்டால்தான் உடல் வளர்ச்சியடையும். ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கல்வியிலும் அவர்கள் கவனம் செலுத்தமுடியும்.

    பள்ளி செல்லும் பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்களை கவனித்துப்பார்த்தால் அவர்கள் காலையில் கொடுக்கும் உணவை பிடிக்காவிட்டாலும் ஓரளவு சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பள்ளிக்கு கொண்டு செல்லும் மதிய உணவு குறித்துதான் அடம்பிடிக்கிறார்கள். இதற்கான மனோவியல் சார்ந்த காரணத்தை மிக எளிதாக புரிந்துகொள்ளலாம்.

    ஒரு சிறுமிக்கு தனது வகுப்பில் பத்து தோழிகள் இருந்தால், மதிய உணவு நேரத்தில் அந்த பத்து பேரின் டிபன் பாக்சை நோக்கி அவள் கவனம் செல்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான உணவுகளை எடுத்து வந்திருப்பதை அவள் கவனிக்கிறாள். அவர்கள் அதை சுவையாக ருசிப்பதையும், சுவாரஸ்யமாக அதை பற்றி பேசுவதையும் கேட்கிறாள். அப்போது, தனது டிபன் பாக்ஸ் மட்டும் தினமும் ஒரே மாதிரியான உணவோடு வருவது அவளுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. எல்லா சிறுவர், சிறுமியர்களும் தங்கள் டிபன்பாக்ஸ் உணவுகளும் காலத்துக்கு ஏற்றபடி மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களை புரிந்துகொண்டு, அத்தகைய உணவு மாற்றங்களை தனது தாயாரோ, பாட்டியோ ஏற்படுத்தாதபோது கோபம் கொள்கிறார்கள்.



    பள்ளிக்குழந்தைகளின் மனநிலையில் இருந்து இதை அணுகி செயல்பட்டால் இந்த பிரச்சினை எளிதாக தீர்ந்துவிடும். தினமும் ஒரே மாதிரியான மதிய உணவை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பி, அதைதான் சாப்பிட்டாகவேண்டும் என்ற சூழ்நிலையை தாய்மார்கள் உருவாக்கக்கூடாது. டிபன் பாக்ஸ் உணவுகளில் புதுமையை உருவாக்கவேண்டும். தினமும் ஒன்று என்ற ரீதியில் வித்தியாசத்தை ஏற்படுத்தவேண்டும். அது கட்டாயம் சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும்.

    பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் 100 கிராம் காய்கறியும், 10 கிராம் கீரையும், போதுமான அளவில் புரோட்டீன் உணவும் இடம்பெறவேண்டும். மீன், மாமிசம், முட்டை வெள்ளைக்கரு, பருப்பு- பயறு வகைகளில் புரோட்டீன் இருக்கிறது.

    காய்கறி என்றால் அதை பயன்படுத்தி கூட்டு, பொரியல், சாம்பார் போன்றவை களைதான் தயார்செய்யவேண்டும் என்பதில்லை. காய்கறிகளை பயன்படுத்தி கட்லெட் தயார் செய்யலாம். பலவண்ண காய்கறிகளை நறுக்கி சாலட் உருவாக்கலாம். காய்கறிகளை வேகவைத்து அதை பன் உள்ளே வைத்து பர்கர் தயாரிக்கலாம். வேர்கடலையோடு துருவிய காய்கறிகளை சேர்த்து வேகவைத்து வழங்கலாம்.

    பிங்கர் சிப்ஸ் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் என்றால் கேரட், பீட்ரூட் போன்றவைகளை அழகாக நறுக்கி வேகவைத்து உப்பு, மிளகு தூள் கலந்துகொடுக்கலாம். அவ்வளவு ஏன் தோசை, இட்லி தயார் செய்யும்போது அதில் பலவண்ண காய்கறிகளை நறுக்கிப்போட்டால் அது கலர் இட்லியாகவும், கலர் தோசையாகவும் மாறி குழந்தைகளை கவர்ந்துவிடும். அதை சாப்பிடும்போது தேவையான அளவு காய்கறிகள் அவர்கள் உடலில் சேர்ந்துவிடவும் செய்யும்.

    இந்த கோணத்தில் தாய்மார்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்றால் அவர் களுக்கு உணவுப்பொருட்களை பற்றி அடிப்படையான அறிவு தேவை. எந்த உணவில் என்ன மாதிரியான சத்துக்கள் இருக்கின்றன என்பதும், எந்த உணவுகள் குழந்தைகளின் உடல் நலனுக்கும், மூளை வளர்ச்சிக்கும் அவசியம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இதற்கு தனிப்பட்ட படிப்பு அவசியம் இல்லை. வாசிக்கும் பழக்கம் இருந்தாலே போதும். உணவு பற்றிய ஏராளமான உபயோகத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.



    சிறுவர், சிறுமியர்களிடம் உணவின் உண்மைகளை உணர்த்துவது மிக அவசியம். அதற்கு வசதியாக தாய் ஷாப்பிங் செல்லும்போது சூப்பர் மார்க்கெட்களுக்கும், கடைகளுக்கும் குழந்தைகளையும் அழைத்துச்செல்லவேண்டும். அங்கு சுவீட்கார்ன், குடைமிளகாய் போன்றவைகளை வாங்குங்கள். சுவீட் கார்னை வேகவைத்து அதில் மிளகுதூள், வெண்ணெய் கலந்து வழங்குங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.

    அதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. காய்கறி சேர்த்த பிரைடு ரைஸ் தயார் செய்யுங்கள். குடை மிளகாயை வேகவைத்து, அதன் உள்ளே அதனைவைத்து சேர்த்து சாப்பிடச் சொல்லுங்கள். முட்டை- ரொட்டித் தூள் கலவையில் கோழி இறைச்சியை முக்கி, சிறிதளவு எண்ணெய்யில் பொரித்துகொடுங்கள். இப்படி வித்தியாசமான உணவுகளை தயார் செய்யும்போது தங்கள் வீட்டு சிறுவர், சிறுமியர்களையும் தாய்மார்கள் சமையல் பணிகளில் இணைக்கவேண்டும். அதன் மூலம் சமையல் பற்றியும் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.

    தாய்மார் சமைத்துக்கொடுக்கும் புதுமையான உணவுகளை சாப்பிடும் குழந்தைகள், அவைகளில் எதை பள்ளிக்கான மதிய உணவாக கேட்கிறார்களோ அதை தயாரித்து வழங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உணவின் அருமை தெரியவேண்டும் என்றால் அவர்களை சாப்பிடுபவர்களாக மட்டும் வைத்திருக்காதீர்கள். உணவு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குபவர் களாகவும் உருவாக்குங்கள்.

    அப்போது அந்த உணவுப் பொருள் விவசாயியால் எப்படி விளைவிக்கப்பட்டது, எப்படி பராமரித்து, அந்த கடையை வந்தடைந்திருக்கிறது என்பதை எல்லாம் குழந்தைகள் உணரும். அதுபோல் சமையலிலும் இடம்பெறவைத்தால்தான் உணவின் அருமை புரியும். வீணாக்காமல் அதை சாப்பிடுவார்கள். உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உணவூட்டுங்கள்.

    தங்கள் குழந்தைகள் பழவகைகள் சாப்பிடுவதில்லை என்று பெரும்பாலான தாய்மார்கள் சொல்கிறார்கள். நேரடியாக அவைகளை சாப்பிட ஆர்வம் காட்டாத குழந்தைகளை, சின்ன மாற்றங்கள் மூலம் ஆர்வப்படுத்தி விடலாம். பழங்களை நறுக்கி தேன், பாலில் கலந்துகொடுக்கலாம். புளிக்காத தயிரில் கலந்தோ, கஸ்டட்டில் நறுக்கி குளிரவைத்தோ வழங்கினால் ருசித்து சாப்பிடுவார்கள்.

    கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் ரெட்டி, சென்னை.
    Next Story
    ×