search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வாழ்க்கை கல்வி
    X

    குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வாழ்க்கை கல்வி

    பெற்றோர்கள் எந்த அளவிற்கு உறவுகளுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதை பார்த்தே குழந்தைகளும் பின்பற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
    குழந்தைகள் அந்தந்த வயதிற்கேற்ப வாழ்வியல் நடைமுறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ப பெற்றோர் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும். அவர்களை பின்பற்றியே தங்களுடைய பழக்க வழக்கங்களை அமைத்துக்கொள்ளத் தொடங்கும். ஆதலால் குழந்தைகள் முன்பாக பேசும்போது கவனமாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்.

    ஒருசில தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். கோபத்தில் கடுஞ்சொற்களை உச்சரித்துவிடுவார்கள். ஒருசிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டே மற்றவர்களை ஏளனமாக பேசிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகள் மனதில் மற்றவர்களை பற்றி தவறான எண்ணங்கள் உருவாக வழிவகுத்துவிடும். குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்பதில் மட்டும் அக்கறை கொள்ளக்கூடாது. அவர்களுக்கு பள்ளிக் கல்வியுடன் வாழ்வியல் கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள ஊக்குவிக்கவும் வேண்டும்.

    பல குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக இருப்பார்கள். அவர்களிடம் நாட்டின் முக்கிய பிரபலங்கள், பிரசித்தி பெற்ற இடங்களை பற்றி கேட்டால் சொல்வதற்கு தடுமாறுவார்கள். ஒருசிலர் ‘எங்களுக்கு அதெல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லை’ என்பார்கள். குழந்தைகள் படிப்புக்கு இணையாக பொது விஷயங்களையும் தெரிந்து கொள்வது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.

    குடும்ப நிலவரமும் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். டீன் ஏஜ் வயதை கடக்கும் குழந்தைகள் முன்னிலையில் குடும்ப செலவுகளை பற்றி பட்டியலிடுவதில் தவறில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு பற்றி அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? சேமிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    டீன் ஏஜ் வயதில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு நன்மை சேர்க்கிறதோ அதற்கு இணையாக தீமைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் களாக தேடிச்சென்று தீமைகளையும் சேர்த்து கற்றுக் கொள்ள பெற்றோர் இடம் கொடுத்து விடக்கூடாது.

    பாலியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞான பூர்வமாக கற்றுக்கொடுப்பது தேவையற்ற சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். அதேவேளையில் உயர்கல்வியில் அவர்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் உறவுகளை பற்றிய புரிதல் குறைந்து கொண்டே இருக்கிறது. அதற்கு பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர்.

    தங்கள் நட்பு வட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் எந்த அளவிற்கு உறவுகளுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதை பார்த்தே குழந்தைகளும் பின்பற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். பணத்தை விட நல்ல மனிதர்களை, உறவுகளை சம்பாதித்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
    Next Story
    ×