search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பது எப்படி?
    X

    குழந்தைகளின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பது எப்படி?

    சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம்.
    பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள். சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது.

    செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர்.

    அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது. கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.

    பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம்.

    அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது.

    Next Story
    ×