search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ செய்யாதீங்க
    X

    குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ செய்யாதீங்க

    பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. நிறைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள்.

    அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்கின்றனர். ஆகவே அத்தகைய பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

    * குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களை அப்போது அடித்தால், அவர்கள் சுபாவம் மிகவும் கடுமையாகிவிடும். அதாவது யாரிடமும் சரியாக பேசாமல், அப்படி யாராவது பேசினால் சிடுசிடுவென்று பேசுவது என்பன போன்ற செயல்களில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இந்த சுபாவம் வருவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, பெற்றோர்கள் தான். ஆமாம், அவர்கள் தவறு செய்யும் போது அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல், உடனே அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மனதில் அந்த பழக்கம் பழகி, பின் அவர்களும் அவ்வாறே நடக்க ஆரம்பிப்பார்கள்.

    * குழந்தைகளை அடித்தால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரும் என்று நினைப்பதை முதலில் மனதில் இருந்து பெற்றோர்கள் நீக்க வேண்டும். ஏனெனில் இவற்றால் அவர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாக மாறும் நிலைக்கு வந்துவிடுவர். அதிலும் குழந்தைகள் தவறு செய்து, பெற்றோர்கள் கடும் தண்டனையை குழந்தைகளுக்கு எப்போதும் கொடுத்தால், அவர்கள் அந்த தவறை மறுபடியும் செய்வர். அவற்றால் சில குழந்தைகள் பல கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்வர். ஆனால் அதையே பக்குவமாக சொல்லி புரிய வைத்துப் பாருங்கள், குழந்தைகள் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் அந்த செயலை மறுமுறை செய்யாமல் இருப்பர்.

    * குழந்தைகளுக்கு கடுமையாக தண்டனையை கொடுத்தால், பின் குழந்தைகளது மனதில் பெற்றோருக்கு தம் மீது அக்கறை, பாசம் எதுவுமில்லை என்று நினைத்து, தவறான பாதையில் வேண்டுமென்றே செல்ல ஆரம்பிப்பார்கள். சிறிது காலத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவர். பின் அவர்கள் தனிமையிலேயே இருந்து, தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பர். பின் அவர்கள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படுவார்கள்.

    * சிலசமயங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் செயல்களால், குழந்தைகள் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சோம்பேறித்தனத்துடன், எதையும் சரியாக செய்யாமல், சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றை மட்டும் செய்வார்கள். குழந்தைகள் என்றால் நன்கு சுறுசுறுப்போடு விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சோம்பேறித்தனத்தோடு இருந்தால், உடல் எடை அதிகரித்து, பின் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.

    ஆகவே பெற்றோர்களே! இனிமேல் குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அவர்களிடம் அவர்களது தவறை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக அடித்தால் தான் குழந்தைகள் திருந்துவார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் தங்கள் மனதில் இருந்து அழித்துவிட்டால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்.
    Next Story
    ×