search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி?
    X

    மாணவர்கள் தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி?

    தேர்வுகளில் வெற்றி பெறவும், தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் அறிந்துகொள்ளலாம்.
    தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தேர்வுகளில் வெற்றி பெறவும் உதவும் குறிப்புகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    ஒருவருக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிரந்தரமாக கிடைப்பதில்லை. சில நேரங்களில் தோல்வியையும் சந்திக்க நேரிடும். சிலர் ஆண்டு இறுதித்தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போகலாம். அதுபோன்ற நிலையில் அவர்கள் மீண்டும் தங்கள் பாடங்களை படித்து தேர்வு எழுதும் நிலை உருவாகும். இதற்காக மனம் வருந்தக்கூடாது. நடந்து முடிந்தவற்றுக்காக யாரையும் குறை சொல்வதோ, குற்றம் கற்பிப்பதோ கூடாது. தவறுகளை திருத்திக்கொள்ள முன்வரவேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனிமேல் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும். எனவே தோல்வி வந்தால் துவண்டுபோய்விடாமல் முன்னேற வேண்டும்.

    எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் முயற்சி மிக அவசியம். முயற்சியே செய்யாமல் இருந்தால் வெற்றி கிடைக்காது. ஒரு செயலில் தோல்வி வரமால் இருக்கவேண்டும் என்றால் அதை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்ல முயற்சி செய்யவேண்டும். குறிப்பாக பள்ளிப்பாடங்கள் புரியவில்லை என்று படிக்காமல் இருப்பதைவிட தெரியாததை தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். ஆசிரியர்களிடம் அணுகி சந்தேகங்களை தெரிவித்து தெளிவு பெறவேண்டும்.

    வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மிகவும் கவனமாக பாடங்களை கவனிக்க வேண்டும். இதையே ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். எனவே வகுப்பறையில் ஆசிரியர் பாடங்களை நடத்தும்போது கவனமாக கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அப்போது சந்தேகம் எதுவும் ஏற்பட்டால் அதை ஆசிரியரிடம் கேட்டு அறிந்துகொள்ள தயங்க கூடாது.



    படிக்கும்போது பாடங்கள் தொடர்பான கருத்துக்களை குறிப்பாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த குறிப்புகளை அடிப்படையாக வைத்து படிக்கும்போது பாடங்கள் எளிதாக புரியும். எதையும் மனப்பாடம் செய்யவேண்டும் என்பதில்லை. நன்றாக புரிந்து படிக்க இந்த குறிப்புகள் உதவும். மேலும் இந்த குறிப்புகள் மூலம் பாடங்களை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும்.

    ‘எதையும் நாளை செய்வோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். இதை படிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றாடம் உடனுக்குடன் படித்துவிடவேண்டும். இல்லை என்றால் படிக்க வேண்டிய பாடங்கள் சேர்ந்துகொண்டே போகும். பின்னர் கடைசி நேரத்தில் மொத்தமாக அனைத்தையும் படிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படும்.

    கற்றலில் குறைபாடு எதுவும் இருந்தால் அதை உடனுக்குடன் சரிசெய்துகொள்ளவேண்டும். எனவே உங்கள் குறைபாடுகளை தயக்கமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டும். உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார்கள்.
    Next Story
    ×