search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளே புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?
    X

    குழந்தைகளே புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?

    வரலாற்றில் புகழ் பெற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் நின்றவை புத்தகங்கள். குழந்தைகள் புத்தகம் ஏன் படிக்க வேண்டும்? புத்தகம் படிப்பதால் நிகழும் மாற்றங்கள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.
    வரலாற்றில் புகழ் பெற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் நின்றவை புத்தகங்கள். குழந்தைகள் புத்தகம் ஏன் படிக்க வேண்டும்? புத்தகம் படிப்பதால் நிகழும் மாற்றங்கள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

    * “மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க ஒவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் கூறியுள்ளார்.

    * புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப் பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாறு, கலாசாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற நல்ல புத்தகங்களை படித்து, கற்று தேர்ந்தால்தான், சமுதாயத்தில் அறிவில் சிறந்தவர்களாக முடியும்.

    * கற்பனைத் திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையிலான தரமான புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும். மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளும்போது அவை வளர்ச்சிக்கு வழி காட்டுபவையாக இருக்கும்.

    * தங்களது பெற்றோர் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பார்த்தால், பிள்ளைகளுக்கும் தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். அப்படி படித்த புத்தகங்களைப் பற்றி பெற்றோர் பிள்ளைகளிடம் விவாதிக்கும் பொழுது, அவர்களுக்கு புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் உருவாகும். நல்ல புத்தகங்களை படிப்பது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும்.

    * நாம் தினமும் அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான நண்பனாக விளங்கும். கணிதத்தின் கடினமான விடை தெரியாத புதிர்கள்தான் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்ததாம். அதற்கு விடை தேடி, அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான்.



    * படிக்கும் இடத்தைவிட, படிக்கும்போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம். படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிடுவது நல்லது.

    திருவள்ளுவர் சொன்னது..!

    ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

    கற்றனைத்து ஊறும் அறிவு’

    அதாவது மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் மீண்டும், மீண்டும் அதன் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல கற்ற கல்வியின் அளவுக்கும், கற்ற நூலின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும். அப்படிப்பட்ட அள்ள அள்ளக் குறையாத, வற்றாத வளமாக என்றும் இருப்பது புத்தகங்கள் தான். அமைதியான, பொறுமையான, அறிவார்ந்த மற்றும் வளமான சமுதாயம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்பதும் புத்தகங்கள் தான். எனவே வளமான வாழ்க்கைக்கு, என்றும் உறுதுணையாக இருக்கும் புத்தகங்களை படிக்க வேண்டும்.

    * நல்ல நூல்களைப் படித்த பின், நண்பர்களுடன் உரையாடும்போது படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும். பல நூல் களைப் படித்து அறிவை வளர்ப்பதன் மூலம் தன்னம்பிக்கை ஏற் படும். ஆக்க அறிவு (Cr-e-at-iv-ity) மிகும். உரையாடும்போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் விரும்பப்பட்டவராக மாற முடியும்.

    எனவே ஒவ்வொரு வீட்டிலும், நல்ல புத்தகங்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நண்பனாக திகழும்!
    Next Story
    ×