search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்காக அறிவை வளர்க்கும் பெற்றோர்
    X

    குழந்தைகளுக்காக அறிவை வளர்க்கும் பெற்றோர்

    குழந்தைகளுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோர் தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
    குழந்தைகள் தவறு செய்தால் தடாலடியாக தண்டனை கொடுத்துவிடக் கூடாது. கடுமையாக திட்டுவது, கை நீட்டி அடிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். அவர்கள் தவறுகளை தொடர்ந்தாலும் பொறுமை இழக்காமல் அவர்களுக்கு புரியும்படி போதனை செய்யுங்கள். அதற்காக உபதேசம் செய்வதையே வாடிக்கையாகவோ, மணிக்கணக்கில் அறிவுரை சொல்லும் வழக்கத்தையோ கொண்டிருக்காதீர்கள். அவர்களை திட்டிக்கொண்டோ, மட்டம் தட்டிக்கொண்டோ இருந்தால் அவர்களுக்குள் ‘நாம் என்ன செய்தாலும் பாராட்டமாட்டார்கள்’ என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிடும். அதன் பின்பு தன்னம்பிக்கையும் குறைந்துவிடும். எந்த செயலையும் ஈடுபாட்டோடு செய்ய மாட்டார்கள்.

    குழந்தைகள் சொல்ல விரும்பும் விஷயங்களை காது கொடுத்து கேளுங்கள். ஒருசில விஷயங்களை எப்படி சொல்வது என்று தெரியாமல் குழந்தைகள் தடுமாறும். அவர்களிடம் மனம் விட்டு பேசினால்தான் அவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

    தினமும் இரண்டு, மூன்று மணி நேரங்களையாவது குழந்தைகளுடன் செலவிட வேண்டியது அவசியம். மற்ற குழந்தைகளைவிட உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள் என்றால் அவர்களை ஊக்கப்படுத்துவதில் தவறில்லை. அதற்காக பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு படி, படி என்று நச்சரிக்கக்கூடாது. அது குழந்தைகளிடம் எரிச்சலை உருவாக்கிவிடும்.



    இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விஞ்ஞானத்தின் விஸ்வரூப வளர்ச்சி குழந்தை வளர்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் கேட்கும் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாத தர்ம சங்கடத்திற்கு பெற்றோர் ஆளாகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

    இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பத்தை கரைத்து குடித்துவிடுபவர்களாக இருக்கிறார்கள். செல்போன், கம்ப்யூட்டர்களில் ‘கேம்ஸ்’ விளையாடுவதை பிரதான பொழுதுபோக்காகவும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் தவறில்லை. அதற்காக ஒரேடியாக விளையாடக்கூடாது என்று நிர்பந்திப்பதும் சரியல்ல.

    குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் விரும்பிய விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கலாம். குழந்தைகளுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோர் தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அது பெற்றோர் பார்க்கும் வேலையிலும் திறமையை வெளிப்படுத்துவதற்கு வழிகாட்டும்.
    Next Story
    ×