search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது எப்படி?
    X

    வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது எப்படி?

    தனிக்குடித்தன வாழ்க்கையை தொடங்கும் இளம் தம்பதிகள் குழந்தை பிறந்ததும், அதனை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
    தனிக்குடித்தன வாழ்க்கையை தொடங்கும் இளம் தம்பதிகள் குழந்தை பிறந்ததும், அதனை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். மூத்த குடும்ப உறுப்பினர்களின் குழந்தை வளர்ப்பு அனுபவத்தை கேட்டு பெற முடியாமலும், அவர்களுடைய அரவணைப்பு கிடைக்காமலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

    * பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குளிப்பாட்டக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி வர வேண்டும். பின்னர் மிருதுவான டவலை கொண்டு துடைக்க வேண்டும். குளிப்பாட்டுவதற்கு முன்பு குழந்தைகளுக்கான பிரத்தியேக லோஷனை உடலில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். பாரம்பரிய முறையில் எண்ணெய் பயன் படுத்துவதும் நல்லது.

    * வெளி இடங்களுக்கு கொண்டு செல்லும்போது குழந்தை காற்றோட்டமான சூழலில் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மென்மையான ஆடைகளையே உடுத்த வேண்டும். ஜிகினா, ஜரிகை பதித்த ஆடைகளை தவிர்க்கலாம். அழகான ஆடை, குழந்தைக்கு அசவுகரியத்தை கொடுத்துவிடக்கூடாது. குழந்தையின் உடலை உறுத்தாத, மிருதுவான, பருத்தி ஆடைகளை அணிவிப்பது சிறந்தது.

    * பச்சிளம் குழந்தைகளை எப்போதும் தூக்கி வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவராக மாறி, மாறி தூக்கி கொஞ்சுவதும் கூடாது. அதேவேளையில் குழந்தையை தொட்டிலிலேயே போட்டு வைக்கவும் கூடாது. அது குழந்தைக்கு சோர்வை ஏற்படுத்திவிடும்.



    * பச்சிளம் குழந்தையை ஜாக்கிரதையாக தூக்க வேண்டும். மூன்று, நான்கு மாதங்கள் கடந்த பிறகுதான் கழுத்து, தலை பாரத்தை தாங்கும் வலிமையை பெறும். அந்த காலகட்டத்தில் குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்க வேண்டும். அதன் பார்வைத்திறன், கேட்கும் திறன், பொருட்களை உன்னிப்பாக கவனித்து பார்க்கும் திறன் போன்ற வற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை முகம் பார்த்து சிரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அரவணைத்து முத்த மிடும்போதும், தூக்கி கொஞ்சும்போதும் அது வெளிப்படுத்தும் அசைவுகளை கவனிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    * ஆறு மாதங்கள் வரையில் தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது. குழந்தை தவழ தொடங்கும்போது தரைப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தவழும்போது அதற்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் மென்மையான தரை விரிப்புகளை விரிக்க வேண்டும்.

    * ஆறுமாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் திடஉணவு கொடுக்க தொடங் கலாம். வேக வைத்து மசித்த காய்கறிகள், மசித்த பழங்கள், ராகி, அரிசி கலந்த கஞ்சி போன்றவற்றை கொடுத்து வரலாம். குழந்தை முட்டி போட்டு தவழ்ந்து, எழுந்திருக்க தொடங்கும்போது விளையாட்டு பொருட் களை காண்பித்து ஊக்கப்படுத்த வேண்டும். பல வண்ண நிறங்களை கொண்ட விளையாட்டு பொருட்கள் அதன் கவனத்தை ஈர்க்கும்.

    * பத்து மாதங்கள் நெருங்கும்போது குழந்தைகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். வீட்டையே வட்டமடிக்க தொடங்கி விடும். எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுவிடும். அதனால் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவைகளின் கைக்கு எட்டும் தூரத்தில் எந்த பொருளையும் வைக்கக்கூடாது. குறிப்பாக கனமான பொருட்களை வைக்கக்கூடாது. அவைகளை பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் ஆர்வத்தில் கீழே இழுத்து போட்டு விடக் கூடும். குழந்தைகளுக்கு காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    * ஒரு வயதை நெருங்கியதும் குழந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். வயிற்று போக்கு, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற வியாதிகள் அடிக்கடி வரும். உடனே டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

    * குறிப்பிட்ட மாத இடைவெளியில் தொடர்ந்து குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும். அதனை சரிவர கவனித்து காலதாமதமின்றி செய்ய வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தடுப்பூசி மிக அவசியம்!
    Next Story
    ×