search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன்
    X

    குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன்

    ஒவ்வோர் ஒரு மணிநேர தொடுதிரை ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கும் குழந்தைகள் 15 நிமிடங்கள் குறைவாகத் தூங்குகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    குழந்தைகளின் தொந்தரவைத் தவிர்க்க அவற்றின் கையில் ஸ்மார்ட்போனை திணித்துவிடுவோர் உண்டு. தங்கள் குழந்தை ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் விதத்தை பெருமையாகக் கூறும் பெற்றோரும் உண்டு.

    ஆனால் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் ஆழ்ந்திருக்கும் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணிநேரம் தொடுதிரை கொண்ட டிஜிட்டல் சாதனங்களில் விளையாடினால் தூக்கம் 15 நிமிடம் குறையும் என ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மூன்று வயதுக்குக் குறைவான வயதுள்ள குழந்தைகளைக் கொண்ட 715 பெற்றோர் களிடம் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிர்க்பெக் ஆராய்ச்சிப் பிரிவு ஆய்வு செய்தது.

    குழந்தை எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட் சாதனத்தில் விளையாடுகிறது மற்றும் குழந்தையின் தூங்கும் பாங்கு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டன.

    அதில், 75 சதவீத குழந்தைகள் தொடுதிரையை தினமும் பயன்படுத்துகின்றனர் என்றும், அதில் 51 சதவீத குழந்தைகள் ஆறு மாதம் முதல் 11 மாத குழந்தைகள் என்றும், 92 சதவீத குழந்தைகள் 25 முதல் 36 மாதங்கள் ஆன குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது.

    தொடுதிரையைப் பயன்படுத்தி விளையாடும் குழந்தைகள் இரவு நேரத்தில் குறைவாகவும் பகல் நேரத்தில் அதிகமாகவும் தூங்குவதாகவும் தெரியவந்திருக்கிறது.



    ஒவ்வோர் ஒரு மணிநேர தொடுதிரை ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கும் குழந்தைகள் 15 நிமிடங்கள் குறைவாகத் தூங்குகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஒரு நாளில், குழந்தை 10 முதல் 12 மணிநேரம் தூங்குவதால், 15 நிமிடங்கள் என்பது பெரிய அளவு இல்லைதான். ஆனால் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சிக்குத் தூக்கம் அவசியம். ஒவ்வொரு நிமிடத் தூக்கமும் முக்கியம் என ஆய்வாளரான டாக்டர் டிம் ஸ்மித் கூறுகிறார்.

    தொடுதிரைப் பயன்பாட்டுக்கும், குழந்தைகளின் தூக்கம் குறைவதற்கும் உள்ள தொடர்பை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுவதாகக் கூறும் ஸ்மித், ஆனால் இதை இறுதியானதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறார்.

    தொடுதிரைப் பயன்பாடு, குறிப்பிட்ட குழந்தைகளின் கை, கால், உடல் அசைவுகளை அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

    அப்படியானால், குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட்போன்களை கொடுக்கலாமா, கூடாதா?

    இதற்கு ஸ்மித் கூறும் பதில், “தற்போது இது மிக குழப்பமான ஒன்றாக உள்ளது. இது தொடர்பான அறிவியல் ஆய்வு ஆரம்பகட்டத்தில் உள்ளது. எனவே இப்போதைக்கு தெளிவாகப் பிரகடனம் செய்ய முடியாது.”

    சாதாரணமாக டி.வி. முன்பு எவ்வளவு நேரம் குழந்தை செலவு செய்வதை அனுமதிக்கிறோமோ அதே நேர அளவுக்கு தொடுதிரைச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்கிறார் இவர்.

    இதன்மூலம், தொடுதிரைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில் மொத்தம் எவ்வளவு நேரத்தை குழந்தைகள் செலவிடலாம் என்பது வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக, தூங்கும் நேரத்தில் வெளிச்சமான திரையை அவர்கள் பார்ப்பதை முறைப்படுத்தலாம் என்கிறார்.

    குழந்தைகளின் தூக்கம் மற்றும் தொடுதிரைப் பயன்பாடு இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து சரியான சமயத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும், இப்போது இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, இன்னும் ஆழமாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கோவன்ட்ரி பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் வளர்ச்சி ஆய்வாளர் டாக்டர் அன்னா ஜாய்ஸ் கூறு கிறார்.
    Next Story
    ×