search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் சிந்தனை திறனை மெருகேற்றுவது எப்படி?
    X

    குழந்தைகளின் சிந்தனை திறனை மெருகேற்றுவது எப்படி?

    பெற்றோர்கள் குழந்தைகளின் தனித்திறமைகளை திசைதிருப்பி விடாமல் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு தனித்திறனை மேம்படுத்த வழிகாட்ட வேண்டும்.
    குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது. சிறுவயதிலேயே குழந்தைகளின் செயல்பாடுகளில் அவர்களின் சிந்தனை திறன் வெளிப்படும். ஒவ்வொரு குழந்தைகளின் செயல்பாடுகளும் ஒவ்வொரு விதமாகவும் இருக்கும்.

    முக்கியமாக விளையாட்டு பொருட்கள் மீதுதான் குழந்தைகளின் கவனம் அதிகமாக பதிந்திருக்கும். ஒவ்வொரு விளையாட்டு பொருளையும் ஒவ்வொரு விதவிதமாக குழந்தைகள் கையாளும்.

    சில குழந்தைகள் விளையாட்டு பொருட்களை தனித்தனியாக பிரித்து பரிசோதித்து பார்க்கும். சில குழந்தைகள் தனித்தனியாக கிடக்கும் பாகங்களை ஒருங்கிணைத்து சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டும். சில குழந்தைகள் சிதறி கிடக்கும் விளையாட்டு பொருட்களை புதிய கோணங்களில் வடிவமைத்து பார்க்க மெனக்கெடும். அதற்கு ஏற்றபடி அந்த குழந்தைகள் சிந்திப்பதுதான் காரணம். தங்களின் சிந்தனையில் உதிக்கும் விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகள் செயல்வடிவம் கொடுக்கும்.



    அவர்களின் சிந்தனை திறனை மெருகேற்றுவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் ஊக்கப்படுத்துங்கள். சில குழந்தைகள் தாங்கள் செய்த செயலுக்கு பெற்றோரின் பாராட்டு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். தாங்கள் செய்த விஷயத்தை பெற்றோரிடம் காண்பிக்கும்போது ஊக்கப்படுத்தினால்தான் அவர்களின் தனித்திறன் மேம்படும். குழந்தைகளை அதன் போக்கிலேயே சிந்திக்கத்தூண்ட வேண்டும். உங்கள் கருத்துக்களையோ, எண்ணங்களையோ அவர்களிடம் திணிக்கக்கூடாது.

    ஒருசிலர் குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடமாட்டார்கள். தங்களுடைய சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது அவர்களின் சிந்தனை ஆற்றலுக்கு தடை போடும் விதமாக அமைந்து விடக்கூடும். குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப உங்களுடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

    ஒருபோதும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து குழந்தையை மட்டம் தட்டக்கூடாது. அது அவர்களிடம் இருக்கும் தனித்திறனை பாதிக்கும். அவர்களின் சிந்தனை ஆற்றலை மழுங்கடிக்க செய்துவிடும். குழந்தைகளின் தனித்திறமைகளை திசைதிருப்பி விடாமல் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு தனித்திறனை மேம்படுத்த வழிகாட்ட வேண்டும்.
    Next Story
    ×