search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்
    X

    குழந்தைகளே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்

    வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். படிக்கும் காலங்களில் கல்வியையும் தாண்டி மென்திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.
    நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நமது ஒவ்வொரு அசைவும், செயல்களும் அன்புடனும், ஆச்சரியத்துடனும் கவனிக்கப்பட்டு இருக்கும். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தவழும்போதும், நடக்கும் போதும், சிறு சிறு வார்த்தைகளை பேசும்போதும் நமது பெற்றோர்கள் மகிழ்ந்து கொண்டாடியிருப்பார்கள்.

    அப்போது பெற்றோர்கள் நமக்கு அறிவுறுத்தும் செயல்களை செய்வதில் நாம் அதிக விருப்பம் கொண்டிருப்போம். பெற்றோர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும், அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்பது குழந்தைப்பருவத்தில் நாம் விரும்பி கடைப்பிடிக்கும் செயலாகும். ஆனால் வளர வளர நமக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள், தேவைகள் ஏற்படத்தொடங்கும்.

    அப்போது பெற்றோர்கள் சொல்வதை செய்வதை விட நம் விருப்பப்படி நடப்பதையே நாம் விரும்புவோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும் நம் விருப்பம் மட்டுமே நமக்கு முக்கியமாக தெரியும். மற்றவர்களின் கட்டளைப்படி ஏன் செயல்படவேண்டும், எனக்கு பிடித்ததை நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று மனம் சிந்திக்கத்தொடங்கும்.

    இதுபோன்ற நிலையில் உங்களிடம் சிறுவயதில் இருந்த லட்சியம் விலகத்தொடங்கும். என்ன செய்யவேண்டும், வாழ்க்கையில் எப்படி உயர்நிலையை அடையவேண்டும் என்று சிறுவயதில் நீங்கள் நினைத்திருந்தீர்களோ அதில் இருந்து விலகி உங்கள் மனம் என்ன விரும்புகிறதோ அதன்படி செயல்படத்தொடங்குவீர்கள்.



    இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். எந்த சூழ்நிலையிலும் உங்களது இலக்கில் இருந்து தவறக்கூடாது. மனம் விரும்புகிறது என்பதற்காக உங்கள் இலக்கை மாற்றக் கூடாது. உங்கள் இலக்குகள் கடினமாக இருக்கலாம். ஆனால் அதை திட்டமிட்டு அணுகினால் வெற்றிபெற முடியும். எனவே உங்கள் இலக்கை அடையவேண்டும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதை அடைய என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு உங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

    சிறுவயதில் சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதன்படி சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்ளவும் செய்வீர்கள். அது அனைவருக்கும் எளிதாக இருக்காது. சைக்கிள் ஓட்டி பழகும்போது கீழேவிழந்து அடிபடும் வாய்ப்பு அதிகம் உண்டு. அப்படி காயம் அடைந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்கிறோம். முடிவில் சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட பின்னர் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், சாதித்து விட்டோம் என்ற பெருமையும் அளவிடமுடியாத திருப்தியை தரும்.

    அதுபோலத்தான் எத்தனை சோதனைகள், தடைகள் வந்தாலும் உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் இருந்து விலகக்கூடாது. கடினமான இலக்கு என்று எதுவும் கிடையாது. மகிழ்ச்சியுடன் செய்யும் எந்த செயலும் கடினமாக இருப்பதில்லை.

    எனவே வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். படிக்கும் காலங்களில் கல்வியையும் தாண்டி மென்திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் கல்வி, உடற்பயிற்சி, ஓவியம் போன்ற கலைகளில் திறமையை வளர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி மூலம் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக்கொள்வது போன்ற மென்திறன்களில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம். இதன் மூலம் கல்வியையும் தாண்டி உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
    Next Story
    ×