search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே தேர்வில் சாதித்து காட்டுவோம்...!
    X

    மாணவர்களே தேர்வில் சாதித்து காட்டுவோம்...!

    மாணவ-மாணவிகளாகிய நமது எண்ணம் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்பதே! முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பயத்தை நீக்கி, மனந்தளராமல் தேர்வை எழுத, சில கருத்துகளை பார்க்கலாம்.
    நம் ஆசைகளும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் இந்த ஆண்டு இறுதித் தேர்வில் சாதித்துக் காட்ட வேண்டும். நம்மிடம் நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் தேர்வில் சாதிக்கலாம். மாணவ-மாணவிகளாகிய நமது எண்ணம் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்பதே! முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பயத்தை நீக்கி, மனந்தளராமல் தேர்வை எழுத, சில கருத்துகள்.

    வீட்டில் செய்ய வேண்டியவை..

    தேர்வு நேரத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்துங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

    தேர்வு நேரத்தில் பதற்றமில்லாமல் சரியான உணவை சாப்பிடுங்கள். சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடுங்கள். வெப்பத்தை தணிக்கும் குளிர்ச்சி தரும் பழங்களை சாப்பிடுங்கள், குளிர் பானங் களை தவிருங்கள். பழச்சாறு குடியுங்கள். குறித்த நேரத்திற்கு உறங்கச் செல்லுங்கள். உறக்கத்தை தவிர்க்காதீர்கள்.

    அதிகாலைப் பொழுதில் எழுந்து படியுங்கள். அதிகாலையில் படிப்பது மனதில் நன்கு பதியும். நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள். உடல் நலனே மிக முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பதுதான் முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும்போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

    நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள். பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளிப் போடாதீர்கள். படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை எழுதி பார்க்க வேண்டும், இப்படிச் செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.



    தேர்வு எழுதும்போது..

    எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்வித்தாளை கவனமாகப் படிக்கவும். நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள். பிறகு ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள். எந்தக் கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.

    பக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள். சூத்திரங் களையும் சமன்பாடுகளையும் கட்டத்துக்குள் எழுதுங்கள். தேவைப்படும்போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.

    ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி பதில் எழுதுங்கள். ஒரே கேள்விக்கு நீண்ட நேரம் பதில் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம். விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கும் முன், கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால், விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.

    பெற்றோர் கவனத்திற்கு..

    மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிப்பிட்ட நடை முறைகளை தங்களுடைய பிள்ளைகள் பின்பற்றுகிறார்களா? என்பதை பெற்றோர் கள் உறுதி செய்யவேண்டும். ஏனெனில் பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

    பெற்றோர், மேற் சொன்ன வழி முறைகளை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக் கொடுக்க வேண்டும், படித்ததை உங்களிடம், எழுதி காண்பிக்கச் சொல்ல வேண்டும், படிப்பைத் தவிர மற்றதன் பக்கம் கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    படி... படி... என்று சொல்வதைவிட படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுங்கள். அவர்கள் படிப்பதை கண் காணியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள். திட்டமிடுதல், படித்ததை நினைவில் நிறுத்துதல், படித்ததை எழுதிப் பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள். கல்வி கற்பதினால் எதிர்காலத்தில் கிடைக்கும் நன்மையை எடுத்துக் கூறுங்கள். தேர்வுக் காலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் அவர்கள் மீது செலுத்துங் கள்.

    மாணவ-மாணவிகளே பயமின்றி தேர்வு எழுதி சாதனை படையுங்கள்; நாளைய உலகம் உங்கள் கையில் என்பதை மறவாதீர்கள்.
    Next Story
    ×