search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை
    X

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

    பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு. கனவையும், லட்சியத்தையும் மனதில் தேக்கி கொண்டு இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது.
    பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தை கடக்க இருக்கிறீர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு. கனவையும், லட்சியத்தையும் மனதில் தேக்கி கொண்டு இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது. பதற்றம் இன்றி, நிதானமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

    பொதுத்தேர்வு காலத்தில், ஒவ்வொரு தேர்வு முடிந்ததும், அதைப்பற்றிய கவலைகளையும், கற்பனைகளையும், எதிர்பார்ப்புகளையும் தூரத் தூக்கிப்போட்டு விட்டு அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள். படிப்பதில் காட்டிய அதே அக்கறையை எழுதுவதிலும் காட்டுங்கள்.

    தேர்வு முடிந்ததும், அடுத்த பதற்றம் சூழ்ந்து விடும். ஆம், அடுத்து என்ன படிப்பது? எந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது? என்ற குழப்பம் ஏற்படும். உங்களை விட உங்கள் பெற்றோர் பரிதவிப்பார்கள். ஆளுக்கு ஆள் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அள்ளி வீசுவார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். தேர்வு ஏற்படுத்திய அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆழ்ந்து சுவாசிக்கக்கூட அவகாசமில்லாத அளவுக்கு உயர்கல்விக்கான தேடல் உங்களை துரத்தும்.



    எல்லாவற்றையும் தூக்கிப்போடுங்கள். மற்றவர்களுடைய அனுபவங்கள் எதுவும் உங்களுக்கு பொருந்தாது. ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான கனவு, உங்கள் திறமை, ஆர்வம், ஆளுமைத்தன்மையை முற்றிலுமாக உணர்ந்தது நீங்கள் மட்டும் தான். அடுத்த சில ஆண்டுகள் வகுப்பறையில் அமர்ந்து படிக்கப்போவதும் நீங்கள் தான். அதனால் நிதானமாக உங்களுக்கான அடுத்த இலக்கை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

    உங்கள் முன் ஏகப்பட்ட வாய்ப்புகள். பல நூறு துறைகள்.. எல்லா துறைகளிலும் திறன் வாய்ந்த ஆளுமைகளின் தேவை இருக்கத்தான் செய்கிறது. பரந்து விரிந்த தேடலோடு, துறை சார்ந்த அறிவையும், செயலாற்றலையும் வளர்த்துக் கொள்ளும் அனைவருக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எதிர்காலத்தைப்பற்றிய பயமே தேவை இல்லை.

    உங்களுக்கு எது பொருந்தும் என்பதை புரிந்து கொண்டு உங்களுக்கான படிப்பைத் தேர்வு செய்யுங்கள். பெற்றோரின் கனவு, பக்கத்து வீட்டுக்காரரின் வழிகாட்டுதல், தூரத்து உறவினரின் அறிவுரை எதுவும் உங்கள் முடிவை பாதிக்க வேண்டாம்.

    படிக்கும் காலம் மட்டுமல்ல.. வாழும் காலமெல்லாம் ஒருங்கிணைந்து உங்களோடு பயணிக்க இருக்கும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். அந்த பொறுப்புணர்வோடு உயர்கல்வியை தேர்வு செய்யுங்கள்.

    என்ஜினீயரிங், மருத்துவம் மட்டுமல்ல... சாதிப்பதற்கான களங்கள் இங்கே ஏராளம் உண்டு. தேடுங்கள்...! பேசுங்கள்...! கேளுங்கள்...! உங்களை பற்றி ஒரு சுய பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கேற்ற உயர்கல்வியைத் தேர்வு செய்யுங்கள்...!

    ‘நீங்கள் எதுவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதுவாக ஆகிவிடுவீர்கள்’ என்கிறார் விவேகானந்தர்.
    Next Story
    ×