search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு எந்த வயதில் ஒழுக்கத்தை கற்று கொடுக்கலாம்
    X

    குழந்தைகளுக்கு எந்த வயதில் ஒழுக்கத்தை கற்று கொடுக்கலாம்

    பெற்றோர் ஒரு நடத்தை தவறானது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதற்குப்பின் எல்லா சமயங்களிலும் அது தவறானதே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
    குழந்தையின் வாழ்க்கையில் ஒருவயது முடிந்தவுடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வது தொடங்குகிறது. முதலில் பெற்றோரின் கட்டுப்பாடுகளின் மூலமும் பின்னர் தன் சொந்த அறிவின் மூலமும் குழந்தைகள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்கிறார்கள். சொந்த அறிவின் மூலம் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் முன்பே, பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் மூலம் பலவற்றை கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.

    குழந்தைகளின் ஒழுக்க நடத்தைகளில் 90 சதவீதம் இவ்வாறே கற்றுக் கொள்ளப்படுகிறது. இக்காரணத்தால் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் நடத்தை ஒழுக்கங்களை உருவாக்கும் பெற்றோர் நல்ல நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும். வார்த்தைகளால் பாராட்டுதல், திண்பண்டங்களை பரிசாக அளித்தல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஒழுக்கமான நடத்தைகளை ஊக்குவிக்கலாம்.

    விரும்பத்தகாத நடத்தைகளை ஒதுக்கும் விதமாக முகம் சுளித்தல், முகத்தை திருப்பிக் கொள்ளுதல், பாராட்டு வார்த்தைகளை கூறாமல் இருத்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் ஒழுக்கம் தவறி நடந்தார்கள் என்பதற்காக அடித்தல், சூடு வைத்தல், கிள்ளி வைத்தல் போன்ற தண்டனைகளை அளிக்கக் கூடாது. தண்டனைகள் ஒருபோதும் கெட்ட பழக்கங்களை குறைத்து நல்ல பழக்கங்களை அதிகரிப்பதில்லை என்பதே உளவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்பு.

    பெற்றோர் ஒரு நடத்தை தவறானது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதற்குப்பின் எல்லா சமயங்களிலும் அது தவறானதே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒழுக்கம் பற்றி பெற்றோர் தாம் சொன்ன கருத்தை எப்போதும் உறுதியாக கடைபிடிப்பது அவசியம்.

    நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும் போது அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது-எது கெட்டது என்பதில் பெற்றோர் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதன் அடிப்படை விதிகள்.

    இரண்டு வயது வரையிலான குழந்தைகள் அவர்களைப் பாராட்டிப் பேசுவதை புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்க மாட்டார்கள் என பல பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகளைப் பாராட்டிப் பேசுவதை பெற்றோர் தவிர்த்து விடுகிறார்கள். பாராட்டிப் பேசுவதை புரிந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோரின் முகத்தில் ஏற்படும் நல்ல முகபாவங்களைக் கொண்டு அம்மா, அப்பா பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும்.

    எந்தெந்த நடத்தைகளுக்கு பெற்றோரின் முகபாவம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்நடத்தைகளை குழந்தை திரும்பத்திரும்ப வெளிக்காட்டும். பெற்றோரின் முகம் சுணக்கமடையும் நடத்தைகளை குழந்தை கைவிட்டு விடும். ஆறு மாதத்திலேயே இது தொடங்கி விடுகிறது. ஆதலால், பெரியோர்களைப் பாராட்டுவது போலவே குழந்தைகளையும் பாராட்டிப் பேசுவது ஒழுக்க நடத்தையை கற்றுக் கொள்ள உதவும்.

    இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் நல்ல பழக்கங்களை பெற்றோரின் அறிவுறுத்தலுக்காக கடைபிடிக்கத் தொடங்குவர். அவர்களின் அறிவு வளர்ச்சி முழுமை பெறாத இக்கால கட்டத்தில் எதற்காக ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி அவர்களின் மனதில் தோன்றுவதில்லை. காரணம் தெரியாமலேயே நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் வயது இது. ஒரு நல்ல நடத்தையால் என்ன நன்மை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் இச்சமயத்தில் சொல்லி கொடுத்தால் அந்நடத்தை அவர்களின் ஆளுமையில் வேறூன்றி ஆயுட்காலம் முழுமைக்கும் நிலைத்து நிற்கும்.

    பள்ளிக்குச் செல்லும் வயதுக்கு முன் குழந்தைகளிடம் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றலாம். சொன்னபடி கேட்காமல் சொல்வதற்கு எதிராக நடப்பது பொதுவான ஒன்று. அவ்வாறு நடக்கும் போது பெற்றோரின் அதிகப்படியான கவனம் கிடைப்பது, அறியாமை, பொறுப்பான வேலை எதுவும் இல்லாமை ஆகியவையே குழந்தைகள் அப்படி நடப்பதற்குக் காரணம்.

    இதனைப் புரிந்து கொள்ளாமல் கடுமையாக அடித்தல் போன்ற தண்டனைகள் குழந்தைகளை கெட்டவர்களாகவும் பெரும்கோபம் கொண்டவர்களாகவும் உருவாக்கிவிடும். சில குழந்தைகள் சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை எதற்கு? பெற்றோர் எச்சரித்திருந்தால் அதுவே போதுமே என்று நினைப்பதும் உண்டு.

    ஆறு வயதிற்கு மேற்பட்ட பதிமூன்று வயதிற்குப்பட்ட சில குழந்தைகள் அதிக அடாவடித்தனம் செய்வதும் சாதாரணமானதே. பள்ளியின் விதிமுறைகளை மீறி ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாவது அதிக குழந்தைகளிடம் தற்போது காணப்படுகிறது. பள்ளியின் மீது குழந்தைப் பருவத்தில் இருந்த பயம் குறைந்து போவதும், பள்ளி வாழ்க்கை அலுப்பைத் தருவதாக இருப்பதுவுமே இதற்குக் காரணம்.

    நாளாக நாளாக இக்குழந்தைகள் தானாகவே சரியாகிவிடுவர். அதற்குள் பெற்றோர் பெரிய பிரச்சனையை உண்டாக்கி பெற்றோர்-குழந்தை உறவு பாதிக்கும் நிலைக்குப் போய்விடும். பெற்றோர் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமை காப்பது நன்று. குழந்தைப் பருவத்தில் சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கூட பெற்றோர் பொறுமையுடன் இருப்பது வாலிப பருவத்தில் அவர்கள் தங்கள் சொந்த அறிவின் துணைகொண்டு ஒழுக்கமானவர்களாக வளர உதவும்.
    Next Story
    ×