search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை எந்த முறையில் கண்டிக்க வேண்டும்
    X

    குழந்தைகளை எந்த முறையில் கண்டிக்க வேண்டும்

    தவறுகளை குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை. இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    ‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதை அவசியத்தை வலியுறுத்துகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள். குழந்தைகளை இப்படியெல்லாம் கண்டித்து வளர்ப்பது அவசியம்தானா? என்ற கேள்வி மனதில் எழலாம்.

    குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல. இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை.

    இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை. உதாரணமாக அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதனால் பல்லுக்கு உண்டாகும் கெடுதல் என்ன என்று குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு குழந்தை தானாகவே சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளும். மாறாக பெற்றோர்கள் அடித்துத் திருத்த நினைத்தால் சாக்லேட் மீது ஆசை அதிகமாகி குழந்தை ஏராளமான சாக்லேட்டுகளை சாப்பிட ஆரம்பித்துவிடும். சில வேளைகளில் பெற்றோர்களுக்கு தெரியாமல் சாப்பிடவும் செய்யும். பொய் பேசுவதும் மறைப்பதும், திருட்டுத்தனமும் இவ்வாறுதான் தொடங்குகிறது.

    பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.

    ஓர் நடத்தையை அதிகப்படுத்த வேண்டுமெனில் வலிமையூட்டிகளை (Reinforcement) பயன்படுத்த வேண்டும். பரிசு, பாராட்டு, மகிழ்ச்சியான முகபாவனை, அன்பு, அரவணைப்பு ஆகியவைகளை வலிமையூட்டிகள் எனலாம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இவற்றை அளிக்கும்போது எந்தவொரு நடத்தையையும் அதிகப்படுத்தலாம்.

    தவறான நடத்தைகளை குறைக்க உளவியல் இரண்டு விஷயங்கள் உண்டு. முதலாவது நடத்தைக்குறைப்புகள் (Negative Reinforcement) இரண்டாவது தண்டனை, முகத்தை சுழிப்பது, பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் முகபாவனை, திட்டுதல், விலகிச் செல்லுதல், எந்த எதிர்வினையும் புரியாமல் இருத்தல், உன் நடத்தை எனக்கு பிடிக்கவில்லை என நேரிடையாகக் கூறுதல் ஆகியவை நடத்தை குறைப்புகள் ஆகும். அடித்தல், கிள்ளுதல், தள்ளி விடுதல், சூடு வைத்தல் போன்றவை தண்டனை வகையில் அடங்கும்.

    நடத்தை குறைப்புகளை பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு உடல்ரீதியான தீங்கு ஏதும் ஏற்படாது. ஆனால் தண்டனையைப் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு வலி போன்ற உடல் தீங்குகள் ஏற்படும்.

    நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு அடி அடித்துவிட்டால், ஒரு முறை சூடு போட்டு விட்டால் அதன் பின்னர் அது பற்றிய பயம் சுத்தமாக இல்லாமல் போய்விடும் எனவே ‘அடித்து விடுவேன்’, ‘உதைத்துவிடுவேன்’, ‘சூடுவைத்து விடுவேன்’ என வாயளவில் மிரட்டலாமே தவிர ஒருபோதும் அவற்றை செய்து விடக்கூடாது. மிரட்டிக் கொண்டிருக்கின்ற வரை பயமுறுத்திக் கொண்டு இருக்கலாம். மேலும் மிரட்டுவதே அதிகப்பட்சம்.

    அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவணைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.
    Next Story
    ×