search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கட்டும்
    X

    குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கட்டும்

    குழந்தைகளை கண்காணியுங்கள். குழந்தைகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களிடம் எப்போதும் மனம்விட்டு பேசுங்கள்.
    குழந்தைகள் கடத்தப்படுவது உலகையே அச்சுறுத்தும் பயங்கரமாகும். ஆண்டு தோறும் ஒரு கோடியே 20 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் கடத்தப்படுகிறார்கள். வேலைக்காகவும், பாலியலுக்காகவும், பிச்சை எடுக்கவும், போதைப் பொருட்கள் கடத்தப்படவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

    குழந்தை கடத்தலைத் தடுக்க பெற்றோர் முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே உடை அணிவித்துவிடவேண்டும். நினைவு தெரிய ஆரம்பித்த சிறுவர்- சிறுமியர்களிடம் ஆடையிட்டு மறைக்கவேண்டிய உடல் உறுப்புகள் பற்றியும், அவைகளை பெற்றோர், தாத்தா பாட்டி தவிர வேறு யாரும் தொட்டால் ‘அனுமதிக்கக்கூடாது’ என்றும் உணர்த்தவேண்டும். அவர்கள் ஓரளவு வளரத் தொடங்கிய பின்பு உடல் உறுப்புகள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் எடுத்துக்கூறுங்கள்.

    சிறுவர், சிறுமிகள் இருவரிடமுமே ‘குட் டச்’ எனப்படும் ‘நல்ல தொடுதல்’, ‘பேட் டச்’ எனப்படும் ‘தவறான தொடுதல்’ இரண்டையும் விளக்கிவிடவேண்டும். தலை, கைகள், முகம் போன்றவைகளில் தொடுவது நல்லதொடுதல். நெஞ்சு, முன்-பின் பக்கங்களில் தொடுவது தவறான தொடுதல் என்பதை விளக்கிவிடுங்கள். தவறான தொடுதல்களை அனுமதிக்கக்கூடாது என்பதையும், அத்தகைய தொந்தரவுகள் இருந்தால் அதுபற்றி பெற்றோரிடம் கூறவேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள்.

    100-ல் 72 குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே செல்போனில் விளையாடத் தொடங்கிவிடுகின்றன என்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று. அதில் 58 பேருக்கு 13 முதல் 15 வயதுக்குள் சொந்தமாக செல்போன் கிடைத்துவிடுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது.

    குழந்தைகளிடம் தங்கள் அன்பை வெளிக்காட்ட லேப்டாப், டேப்லெட் போன்றவைகளை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகள் மூலம் சிறுவர், சிறுமியர்கள் ஆபத்தில் சிக்குவது பெருகிவருகிறது. வாங்கிக்கொடுத்து, பிரச்சினைகளில் சிக்கிய பின்பு கண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை. 18 வயது வரை கம்ப்யூட்டர், லேப்டாப்களில் இன்டர்நெட் தொடர்புக்கு ‘பாஸ்வேர்டு’ வைத்துக்கொள்ளுங்கள்.

    இன்டர்நெட் தொடர்புள்ள கம்ப்யூட்டரை எல்லோரும் புழங்குகின்ற பொது அறையில் வைத்திருங்கள். பள்ளிப் பருவத்தினர் இன்டர்நெட்டில் தகவல்கள் சேகரிக்க, நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொடுங்கள்.

    பள்ளியில் படிப்பவர்களுக்கு போன் வாங்கிக்கொடுப்பதாக இருந்தால், சாதாரண போன்களை வாங்கிக்கொடுங்கள். அவர்களுக்கு ‘போஸ்ட் பெய்டு’ முறையே சிறந்தது. பில் அனுப்பும்போது யார், யாரிடம் பேசினார்கள் என்பதை அறிய ‘கால் லிஸ்ட்’டையும் கேளுங்கள்.

    குழந்தைகளை வெளியே எங்கேயாவது அழைத்துச் செல்லும்போது தெரிந்தவர்கள் கடையில் சிறிதுநேரம் நிறுத்திவிட்டு செல்வது, ஆட்டோவில் உட்காரவைத்துவிட்டு செல்வது, அடுத்த வீடுகளில் பார்த்துக்கொள்ளும்படி ஒப்புவித்துவிட்டு செல்வது போன்றவைகளை தவிர்த்து விடுங்கள். ஏன்என்றால் நம்மை சுற்றியிருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது நமக்கு தெரியாது. அதனால் அடுத்தவர்களுக்கும்- குழந்தைகளுக்கும் இடையே எப்போதும் இடைவெளி இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். அந்த இடைவெளி ஏன் தேவை என்பதை பற்றி குழந்தைக்கும் எடுத்துச்சொல்லுங்கள்.

    வேறுவழியே இல்லாமல் உறவினர் வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ குழந்தைகளை விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டால், நீங்கள் வீடு திரும்பியதும் முதல் வேலையாக குழந்தைகளை அழைத்து, ‘அந்த வீட்டில் எப்படி நடந்துகொண்டார்கள்? என்னென்ன நடந்தது?’ என்பதை எல்லாம் முழுமையாக, நிதானமாக விசாரியுங்கள். வெகுளித்தனமாக குழந்தை பேசுவதையும் உற்றுக்கவனித்து, அதன் உள்அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். ‘இனிமேல் நான் அந்த வீட்டிற்கு செல்லமாட்டேன். அந்த வீட்டில் உள்ளவர்களை எனக்கு பிடிக்கவில்லை’ என்று குழந்தை சொன்னால், அதற்கான காரணத்தை தெளிவாகக் கேளுங்கள்.

    குழந்தைகளின் சில விருப்பங்களை பெற்றோர்கள் பொதுவாகவே நிறைவேற்றுவதில்லை. இருசக்கர வாகனத்தில் முன்னால் இருந்து செல்ல சில குழந்தைகள் விரும்பும். அது பாதுகாப்பற்றது என்று பெற்றோர் கருதி அதை தவிர்த்திருக்கலாம். சாக்லேட்களை நிறைய வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். அது நல்லதில்லை என்று பெற்றோர் கருதி அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம். இதை எல்லாம் உணர்ந்துகொண்டுதான் கடத்தல் காரர்கள் குழந்தைகளை அணுகுகிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தை அருகில் கொண்டு வந்து விட்டுக்கொண்டு, ‘உனக்கு இதில் பயணம் செய்ய பிடிக்கும்தானே? வா.. ஒரு ரவுண்டு போய் வரலாம்’ என்று அழைக்கிறார்கள். ‘இதோ உனக்கு பிடித்த சாக்லேட்!’ என்று கொடுக்கிறார்கள்.

    சாலை ஓரங்களில் வாடிய முகத்துடனோ, கண்களை கசக்கிக்கொண்டோ நிற்கும் குழந்தைகளை பார்த்து, ‘உன்னை புறக்கணிக்கும் பெற்றோருக்கு ஒரு பாடம் புகட்டலாம். நீ என்னோடு வந்துவிடு..’ என்று அழைப்பு விடுக்கலாம். இத்தகைய வார்த்தைகளுக்கு குழந்தைகள் செவிசாய்த்துவிட்டால், அவர்களை கடத்திவிடக்கூடும்.

    சில கடத்தல்காரர்கள் குழந்தைகளை அறியாமல் நடந்துவிட்டதுபோல் தட்டுவார்கள். குழந்தை எதிர்ப்பு தெரிவித்தால் ‘சாரி’ சொல்லிவிட்டு அகன்றுவிடுவார்கள். எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் மறுநாளும் தட்டுவார்கள். குழந்தையை பார்த்து சிரிப்பார்கள். அப்படியே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் காரியத்தை சாதித்துவிடுவார்கள். சிலர், ‘உன்னோடு ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்’ என்று ஆரம்பித்து, படம் எடுத்துவிட்டு, அந்த படத்தைக்காட்டியே நெருக்கத்தை உருவாக்குவார்கள். ‘நீ எங்களோடு வராவிட்டால் உன் பெற்றோரை கொன்றுவிடுவேன்’ என்று கூறி, குழந்தையை கடத்துகிறவர்களும் உண்டு.

    குழந்தைகள் பெருமளவு கடத்தப்படுவதால், அவர்களை எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கூறுங்கள். குழந்தைகளை கண்காணியுங்கள். குழந்தைகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களிடம் எப்போதும் மனம்விட்டு பேசுங்கள்.
    Next Story
    ×