search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்
    X

    குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்

    உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.
    'என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை'னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?. உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.

    குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.

    குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

    2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

    3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.

    4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.

    5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..

    6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.

    7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.

    இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது.

    Next Story
    ×