search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அதிக மதிப்பெண் தரும் மாணவர்களின் அழகான கையெழுத்து
    X

    அதிக மதிப்பெண் தரும் மாணவர்களின் அழகான கையெழுத்து

    சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து.
    சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து. சிலர் நன்றாகப் படித்தும் அவர்களுக்கு கையெழுத்து பெரும் சவாலாய் அமைவது உண்டு. உங்களின் கையெழுத்தை அழகாக மாற்றவும், அழகாக எழுதி அதிக மதிப்பெண் பெறவும் சில சுலபமான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்..!

    * நாம் கல்வி கற்பதற்கும், நம்முடைய எண்ணத்தை வெளிப்படுத்தவும் கையால் எழுதும் முறை முக்கியத்துவம் பெறுகிறது. நன்றாக எழுதுவதற்கும், கல்வி கற்பதற்கான அடிப்படை வழிமுறைகளில் கையெழுத்து இன்றியமையாததாக விளங்கிவருகிறது.

    * கல்வித் திறனை அதிகரிக்க நாம் படித்தவற்றை மீண்டும் மீண்டும் எழுத வேண்டும். எழுத்துக்களை எப்படி சரியாக எழுதுவது என்பதை கேட்டறிந்து எழுத வேண்டும். உங்களின் எழுத்துக் கோர்வையில் ஏதாவது சில எழுத்துகளோ அல்லது பல எழுத்துகளோ சரியான வடிவம் இல்லாவிட்டால் உங்களின் ஒட்டுமொத்த கையெழுத்து தோற்றத்தையே பாதிக்கலாம். அத்தகைய எழுத்துக்களை அழகான வடிவத்தில் எழுதப் பழக வேண்டும். அழகாக எழுதுபவர்களை அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்த்து அதை பின்பற்றலாம்.

    * அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள். எழுத்து என்பதும் ஒரு ஓவியம்தான். அந்த ஓவியத்தை அழகாய் தீட்ட வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டாலும், அனைவருக்குமே அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை. ஆனால் அழகான கையெழுத்து அமையப் பெறாதவர்கள் அதற்காக சோர்ந்துவிட வேண்டியதில்லை. உங்களின் கையெழுத்தை பயிற்சியின் மூலம் சரிசெய்தால், கையெழுத்து அழகாக மாறிவிடும்.

    * கையெழுத்து எழுதப் பழகுவதற்கு சிறு சிறு ஓவியங்களைப் பார்த்து வரையக் கற்றுக் கொள்ள வேண்டும். பொருட் களைப் பார்த்து வரையக் கற்றுக் கொண்டபின் எழுத்துகளின் வடிவங்களைப் பார்த்து எழுதிப் பழகினால் அழகாக கையெழுத்து அமையும் என்று மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

    * எழுத்துக்களை கோடுகளின் அடிப்படையில் எழுதும்போது, வடிவம் வேறுபடுவதில்தான் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுபட்டு தெரிகிறது. எனவே முதலில் அதை சரி செய்ய வேண்டும். சிலருக்கு ஒருசில எழுத்துகள் மட்டுமே பிரச்சினையாக இருக்கலாம். எனவே நீங்கள் அத்தகைய எழுத்துக்களை அழகான வடிவத்தில் எழுதப் பழக வேண்டும்.

    * கையெழுத்தை அழகாக மாற்றுவதில் இன்னொரு அம்சம் இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையிலும், சொற்களுக்கு இடையிலும் பொருத்தமான, போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இந்த இடைவெளி கையெழுத்தின் தோற்றத்தை மாற்றுகின்றன. அழகான கையெழுத்துகளில் இந்த இட அளவு எப்படி பின்பற்றப்பட்டு உள்ளது என்பதைப் பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும். எனவே இந்த வகையிலும் முறையான பயிற்சி செய்து கையெழுத்தை அழகாக்கலாம்.

    * நமது கையெழுத்தை அழகாக மாற்றி, அதே அழகிய கையெழுத்தில் தேர்வை எழுதும்போது நாம் பெறும் மதிப்பெண்கள் அதிகமாகும். அதே சமயத்தில் தேர்வுக்காக மட்டுமே கையெழுத்தை மாற்ற வேண்டும் என்று எண்ண வேண்டாம். ஆளுமைப்பண்பு, தன்னம்பிக்கை, சிந்தனைத் திறன் வளர்ச்சியிலும் கையெழுத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அழகிய கையெழுத்தானது பார்க்கும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தும். எல்லோரது பாராட்டையும் எல்லா நேரத்திலும் பெற்றுத்தரும். அந்த பாராட்டானது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

    * கையெழுத்து அடித்தல் திருத்தல் இல்லாமல் இருப்பதே சிறப்பு. எங்கு எதை எழுதினாலும் தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்று மனதில் பதியுங்கள். தவறாக எழுதிய எழுத்தின் மீது, திரும்பவும் எழுதாதீர்கள். அடுத்ததாக தெளிவாக எழுதிவிடலாம்.

    * எழுத்து வரிசை நேர்கோட்டில் இருத்தல் அவசியம். எழுதிய எழுத்துகள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் வைத்து அழகிய வடிவங்களை பதியுங்கள்.

    * விடைத்தாள் திருத்தும் முறையில் கையெழுத்துக்கு சில மதிப்பெண்கள் ஒதுக்கப்படுவது உண்டு. எனவே அழகிய கையெழுத்து அமையப் பெற்றால்தான் முழுமையான மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.
    Next Story
    ×