search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
    • ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகிறார்.

    தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில்.

    தலவரலாறு

    திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.

    இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரை பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார்.

    பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை `அம்மச்சிபிலா' என்று அழைத்தனர்.

    யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார்.

    ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.

    தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது `ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஶ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலாமரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     ஆலய அமைப்பு

    தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. `ஶ்ரீகோவில்' எனப்படும்

    கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் அருள் காட்சி வழங்குகின்றார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

    தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.

    • பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு.
    • பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

    தல வரலாறு

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

    அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

    குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். "நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்" என்றார்.

     பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா' புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

    இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     அக்னி குண்டம் இறங்கும் விழா

    இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

    பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

    அமைவிடம்

    சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
    • பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

    மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே.

    பொருள்:

    மாசில்லாத சிவபெருமானே... ஒருமைப்படாமல் சிதறு கின்ற சிந்தனைகளை கொண்ட மனதால், உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்த நிறைந்த அன்பால் கசிந்தும், உள்ளம் உருகியும் நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவன் நான். அப்படிப்பட்ட எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையாக வந்து, உன்னுடைய நீண்ட அழகிய கழல் அணிந்த திருவடிகளைக் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்கு, பெற்ற தாயை விடவும் அதிகமான அன்பை செலுத்தும் தத்துவப் பொருளே.

    • 28-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி.
    • 29-ந்தேதி புனித வெள்ளி.

    26-ந்தேதி (செவ்வாய்)

    * பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

    * ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் ரத உற்சவம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல்.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி- சுந்த ரேஸ்வரர் திருப்பரங் குன்றம் எழுந்தருளல்.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி)

    * புனித வெள்ளி.

    * திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி அம்ச வாகனத்தில் வீதி உலா.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (சனி)

    * தாயமங்கலம் முத்துமாரி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

    * திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் பவனி.

    * சென்னை மல்லீஸ்வரர், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் கோவில்களில் விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (ஞாயிறு)

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, பஞ்சமுக அனுமனுடன் ராமர் திருக்கோலக் காட்சி.

    * உப்பிலியப்பன் திருப்பல்லக்கிலும், இரவு தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் புறப்பாடு.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (திங்கள்)

    * தாயமங்கலம் முத்துமாரி அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
    • உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

    புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.

    உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.

    உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.

    உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.

    கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.

    நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)

    உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்

    • திருவரங்கம் கோயிலின் புரோகிதராக, தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர்.
    • ராமானுஜ நூற்றந்தாதி எனும் சிறந்த நூலை இயற்றினார்.

    நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்

    சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்

    உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால்

    இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!

    திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர் புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல் திருவரங்கத்தின் கோவில் சாவி அவரிடம் தான் இருந்தது அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார்.

    அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஒதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம் அதாவது இன்று திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    பங்குனி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சத்திரத்தில் நம்பெருமாள் கண்டருளும் சப்தாவரணம் அமைந்து விசேஷமாகும்!

    இதில், நம்பெருமாள் வீதி புறப்பாட்டில் அத்யாபக கோஷ்டியில் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்களை சேவிக்க, தாமும் மற்றும் அடியார்களும் காதுகுளிர கேட்பதற்காக சப்தமில்லாமல் (மேள ஒசையே இதில் இல்லாமல்) எழுந்தருள்வார்! இந்த காரணத்தினால் இந்த பத்தாம் திருநாள் சப்தாவரணம் எனப்படுகிறது!

    நம்பெருமாள் வீதி புறப்பாடு முடித்து, தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார்!

    இராமாநுசரும் கைத்தலமாக சந்நிதி முற்றத்தில் எழுந்தருளி, நம்பெருமாளை கண்குளிர சேவிப்பார் பெருமாள் இராமாநுசருக்கு தாம் உடுத்திக் களைந்த பீதக ஆடை, மாலை, சாத்துப்படி சடாரிசாதிப்பார்.

    • முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 3.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறிகண்டருளல். பழனி ஸ்ரீமுருகப்பெருமான் தந்தப்பல்லக்கு இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிம்மதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-வரவு

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-இனிமை

    கன்னி-களிப்பு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- வெற்றி

    மகரம்-உண்மை

    கும்பம்-உறுதி

    மீனம்-துணிவு

    • தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
    • நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..

    விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் `தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.

    அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், அஸ்திர தேவருக்கு தீபாராதனை நடைபெற்று தேர் இழுக்கப்பட்டது.

    தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    தேரோட்டம்

    பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    திருக்கடையூர்:

    திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×