search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரியனுக்கு நன்றி சொல்லுங்கள்
    X

    சூரியனுக்கு நன்றி சொல்லுங்கள்

    போகிக்கு பின் பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள், சூரியப் பொங்கல். இதனை ஏன் சூரியப் பொங்கல் என்று அழைக்கிறோம்? என்று பார்க்கலாம்.
    போகிக்கு பின் பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள், சூரியப் பொங்கல். இதனை ஏன் சூரியப் பொங்கல் என்று அழைக்கிறோம்?

    நமக்கும் இந்த பூமிக்கும், சூரியனுக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. வருடத்தின் சில நாட்களில் மட்டும் அவற்றிற்கும் நமக்குமான சம்பந்தம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் பூமியின் வடக்கு கோளத்தில் சூரியனின் தாக்கம் சற்றே குறைந்து போகிறது. இதனால், உயிர் சக்தி குறைந்து விடும். விதை சரியாக முளைக்காது. கருத்தரித்தல் கூட செய்யக் கூடாது என்று நம் கலாச்சாரத்தில் சொல்லி வந்திருக்கிறோம். ஏனெனில், எந்தவொரு விதையும் இந்தக் காலகட்டத்தில் முழுமையாக வளராது. காரணம், சூரியனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இதனை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

    சோலார் எனர்ஜி என்பது புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் என்று தவறாக நினைக்க வேண்டாம். நம் உயிரும் சோலார்எனர்ஜி தான், அல்லவா? இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரும், செடியும் கொடியும் புழுவும் பூச்சியும் மனிதனும் மாடுகளும் என அனைத்துமே சோலார் எனர்ஜியால் தான் இயங்குகின்றன. சூரிய சக்திதான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. மார்கழி மாதத்தில், மிகக் குறைந்த அளவிலேயே நமக்கு சூரிய சக்தி கிடைக்கிறது. மார்கழி மாதம் முடிந்த பின் சூரியனின் பயணம் நம்மை நோக்கி நிகழ்கிறது.

    இன்றைய காலத்தில், சூரியன் நம்மை நோக்கி வருகிறது என்று சொன்னவுடன் பயம் தொற்றிக் கொள்கிறது. சென்னையில் இருப்பவர்களுக்கெல்லாம் தண்ணீர் கிடைக்காது என்றுபயம். வெயில் கொளுத்தும் என்று பயம். இந்த பாதிப்பு சூரியனால் ஏற்படுவது அல்ல. நம் புத்தியின்மையால் ஏற்பட்ட பாதிப்பு.

    உட்கார மர நிழல் இல்லை, இதனால், வெப்பம் கூடுகிறது. நம்மைச் சுற்றியிருப்பதை கவனிக்காததால் ஏற்படும் பிரச்சனை இது. சூரியன் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? இதை உணர்ந்ததால் தான் சூரியனுக்காக ஒரு கொண்டாட்டத்தினை அமைத்தனர். சில காலம் குறைவான பலன்களை அளித்த சூரியன் மீண்டும் நமக்கு பலன் கொடுக்க வந்து விட்டான் என்ற நன்றியில் சூரியப் பொங்கல் கொண்டாடினர்.

    இந்த சூரியப் பொங்கலுக்கு பின்வரும் வெயில் காலத்தினை நாம் நன்றாக உணர வேண்டு மென்றால், நம் மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க செடி கொடிகள் வேண்டும், மாடு வேண்டும், அதன் சாணம் வேண்டும். மாட்டின் செயல்பாடு நமக்கு வேண்டும்.

    சூரியனுடைய சக்தி இல்லாமல் நாம் இங்கு வாழ முடியாது. ஆனால், சூரியன் வந்தால் அழுகைதான். ஏன்? உட்கார நிழல் இல்லாமல் செய்து விட்டோம். மண்ணில் வளம் இல்லை. ஆற்றில் தண்ணீர் இல்லை. கிணற்றிலும் நீர் இல்லை. பூமியை துளைத்து ஆயிரம் அடிக்கு போர்வெல் போட்டாலும் நீர் இல்லை. இதற்கு சூரியன் காரணம் அல்ல, நம் புத்தியின்மை தான் காரணம். இதை நாம் சரி செய்ய வேண்டும். அப்போது தான் சூரியப் பொங்கல் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது.

    சூரியன் இல்லாமல் பயிறு செய்வது எப்படி? நாம் உயிர் வளர்ப்பது எப்படி? அதனால், இந்நாளில் அவனுக்கு நம் நன்றியை செலுத்திக் கொள்கிறோம். அவனை வரவேற்கிறோம். மீண்டும் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அவன் திரும்பி வராவிட்டால் இங்கு உயிர் நிகழாது என்பதை புரிந்து வைத்துக் கொண்டு அவனை வரவேற்கும் விதமாக சூரியப் பொங்கல் கொண்டாடுகிறோம்.
    Next Story
    ×