search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையருளைப் பெற்றுத்தரும் நற்குணங்கள்
    X

    இறையருளைப் பெற்றுத்தரும் நற்குணங்கள்

    இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்து, நபிகளாரின் நற்குணங்களை செவ்வனே செயல்படுத்தும்போது நிச்சயம் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நமக்கு கிடைக்கும்.
    ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:21)

    நபிகள் நாயகம் குறித்து அல்லாஹ் அறிமுகம் செய்கிறபோது, ‘தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது’ என்று மட்டும் அறிமுகம் செய்யாமல், ‘அத்தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று கூறி நபிகளாரின் ‘அழகியல் ஆளுமை’யை நமக்கு அறிமுகம் செய்கிறான்.

    அல்லாஹ்வின் இந்த அழகான அறிமுகத்திற்கு ஏற்ப நபிகளாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அழகியல் நேர்த்தியும், ஒழுங்கியல் செம்மையும் இடம்பெற்றிருந்தது.

    சொல், செயல், உடை, நடை, பாவனை, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அவர்கள் பெற வேண்டிய உரிமைகள் என அனைத்து செயல்பாடுகளிலும் நபிகளார் ஓர் அழகான ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்தார்கள். நபிகளாரின் வாழ்வில் எந்தவொரு பகுதியை கூர்ந்து கவனித்தாலும் அதில் அழகிய ஒழுங்குமுறை இருப்பதைக் காணலாம்.

    நபிகளாரின் நற்குணம் குறித்து கூறப்படும் இறை வசனங்களை பார்ப்போம்:

    ‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் ஆக மிக உயர்ந்த, மகத்தான மாபெரும் நற்குணத்தில் இருக்கின்றீர்’. (68:4)

    (முமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அதுஅவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; தவிர, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முமின்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த கிருபையும் உடையவராக இருக்கின்றார். (9:128)

    ‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்(எனும் கிருபை)தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்துகொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர் களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன்மீது பொறுப்பு ஏற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3:159)

    (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட்கொடையாகவே அன்றிஅனுப்பவில்லை. (21:107).

    இன்றைக்கு நபிகளாரின் இத்தகைய பண்புகள் நம்மிடம் இருக்கின்றதா என்பதை நாம் சோதித்து அறிய வேண்டும்.

    நம்மை ஒட்டி வாழும் சகோதரர்களுக்கு நாம் நன்மையை நாடுகிறோமா? இல்லை தீமையையா? அவர்களுக்காக நாம் எதைவிட்டுக் கொடுத்தோம்?

    வரிசையில் காத்திருப்பது என்பது நமக்கு சர்வ சாதாரணமாக பழகிப்போன ஒன்று. அதில் கூட அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் ஒருவரை ‘முன்னுக்கு’ அனுப்ப மனம் வருவதில்லையே?

    நெருக்கடியான நேரங்களில் தான் நம் நற்குணம் வெளிப்பட வேண்டும். அதுதானே நம்முடைய மனிதாபிமானத்திற்கு நல்லழகு. ஆனால், இந்த நற்குணங்கள் இன்று நம்மை விட்டு மறைந்தது ஏன்?

    ‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ், அநீதி இழைத்தவனை மன்னித்திடு, தீங்கு செய்தவனுக்கும் நன்மை செய்’ என்ற நபிகளாரின் மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியுமா? நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல. அவை அனைத்துமே அனுபவப்பூர்வமான, செயலாக்கம் பெற்ற வெற்றிச் சொற்கள்.

    எனவே நமது வாழ்நாட்களில் இவற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். மனிதன் நற்குணத்துடன் வாழ வேண்டுமே தவிர நயவஞ்சகத்தனத்துடன் அல்ல. நயவஞ்சகன் எப்படி இருப்பான் என்பது குறித்து இறைத்தூதர் இப்படிச்சொன்னார்கள்:

    ‘நயவஞ்சகன் என்பவன் பேசினால் பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்; ஒப்பந்தம் செய்தால் முறித்து விடுவான்’.

    நாம் இன்றைக்கு எப்படியிருக்கிறோம் என்று நம்மை நாமே அவ்வப்போது சுய மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டிய நேரமிது.

    நபிகளார் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொண்டதனால் தான் இந்த மார்க்கம் வளர்ந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இஸ்லாமை ஏற்று சிறப்பாக வாழ்கின்றனர்.

    இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்து, நபிகளாரின் நற்குணங்களை செவ்வனே செயல்படுத்தும்போது நிச்சயம் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நமக்கு கிடைக்கும். நாம் வாழும் காலமெல்லாம் நபிகளாரின் நற்குணங்களை கடைப்பிடித்து வாழ முன் வர வேண்டும்.

    நற்குணங்களை போற்றுவோம்!

    துர்க்குணங்களை மாற்றுவோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    Next Story
    ×