search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.
    X
    எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது

    சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்பலப்புழை, ஆலங்கோடு ஐயப்ப பக்தர் குழுவினரின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறுகிறது.

    இதையொட்டி, அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு ஐயப்பபக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பேட்டை துள்ளல் நிகழ்ச்சி, எருமேலியில் நேற்று நடந்தது.

    ஐயப்ப பக்தர்கள் பாகுபாடு இன்றி அனைவரும் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, இலை-தழைகளை கையில் ஏந்தியவாறு சுவாமி ஐயப்பனை பற்றி பாடி ஆடினர். மேலும், யானை மீது ஐயப்பன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்கள் எருமேலி கொச்சம்பலத்தில் இருந்து வாவர் மசூதி சென்று காணிக்கை செலுத்தினர். அப்போது வாவர் பள்ளிவாசல் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குருசாமிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டன. பின்பு அவர்கள் தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், இரவு சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதை வழியாக பக்தர்கள் குழுவினர் சபரிமலைநோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர்.

    இவர்கள், பேரூர்தோடு, காளை கட்டி, அழுதாமலை, கரிமலை வழியாக நடந்து சென்று நாளை (சனிக்கிழமை) பெரியானை வட்டம் வழியாக அனைவரும் பம்பை ஆற்றங்கரை சென்று முகாமிடுவார்கள்.

    பம்பையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். பின்னர் அவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
    Next Story
    ×