search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலையில் பூஜைக்கான பொருட்களை சன்னிதானத்திற்கு கொண்டு சென்ற காட்சி.
    X
    சபரிமலையில் பூஜைக்கான பொருட்களை சன்னிதானத்திற்கு கொண்டு சென்ற காட்சி.

    14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் குவியும் வெளிமாநில பக்தர்கள்

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலைக்கு தற்போது வருகைதர தொடங்கி உள்ளனர். மகரவிளக்கு பூஜைக்கு சில நாட்களே உள்ளதால் அவர்கள் சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அடித்து தங்கி உள்ளனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுமார் 12 மணிநேரம் வரை காத்திருந்த பிறகே சுவாமி ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்ய முடிகிறது. நேற்று மலையாள நடிகரும் பாரதீயஜனதா எம்.பி.யுமான சுரேஷ்கோபி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார்.

    மகரவிளக்கு பூஜை காலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பேட்டை துள்ளல். இந்த ஆண்டு நாளை மறுநாள் (11-ந்தேதி) சபரிமலை எரி மேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எந்த பாகுபாடும் இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் தங்கள் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு கைகளில் இலை, தழைகளை ஏந்தியவாறு சரணகோ‌ஷம் முழங்க ஆடிப்பாடி ஐயப்பனை வழிபடும் இந்த நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்பார்கள். 


    சபரிமலையில் நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. சாமி தரிசனம் செய்த காட்சி.

    அம்பல புழை, ஆலங்கோடு பக்தர்கள் இந்த பேட்டை துள்ளலில் பங்கேற்றபிறகு பெருவழி பாதை வழியாக சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். சபரிமலைக்கு எப்பொழுது கன்னி சாமிகள் வருகை தராமல் இருக்கிறார்களோ அப்போது மாளிகை புரத்தம்மனை திருமணம் செய்துகொள்வதாக ஐயப்பன் உறுதி கொடுத்ததாக ஐதீகம். 

    இதையொட்டி மாளிகைபுரத்தமன் வருகிற 14-ந்தேதி சபரிமலையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ந்தேதி அவர் சரங்குத்தி வரும்போது கன்னி சாமிகள் சபரிமலைக்கு வருகை தந்தற்கு அடையாளமாக அங்கு சரங்குத்தப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் மாளிகைப்புரத்திற்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    மகரவிளக்கு பூஜை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆள் இல்லாத குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. 
    Next Story
    ×