search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து செல்வமும் தரும் ஆருத்ரா அபிஷேகம்
    X

    அனைத்து செல்வமும் தரும் ஆருத்ரா அபிஷேகம்

    மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை’ ஆருத்ரா தரிசனம் என்ற சிறப்பு பெறுகின்றது.இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அநேக இந்துக்களுக்கு இப்பெயரினைக் கேட்டவுடன் ‘திருவாதிரை’ நட்சத்திரம் பற்றிய ஞாபகம் வரும். ‘ஆருத்ரா’ என்றும் அழைப்பர். சிவனின் நட்சத்திரம் என பெருமை கொள்வர். தமிழில் இதன் பொருள் மிகப்பெரிய ‘புனித ஒளி அலை’ என்பதாகும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அன்னை பார்வதி பகவான் சிவனால் சகதர்ம சாரிணியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளாக இந்துக்களால் கொண்டாடப்படு கின்றது. இந் நன்னாளில் ‘அர்த்த நாரீஸ்வரராக’ மக்களுக்கு அருள் பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    ‘திருவாதிரை’ என்பது தங்க சிகப்பு நெருப்பு என்றும் இதனை சிவபிரான் 132 டிரில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோற்றுவித்தார் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனை ஜன்ம நட்சத்திரமாகக் கொண்டுள்ள சிவபிரான் அடிமுடி காண முடியா மாபெரும் சக்தி. திரு என்ற அடை மொழி இரண்டு நட்சத்திரங்களுக்கே உண்டு. திருவாதிரை சிவபிரானுக்கும், திருவோணம் பெருமாளுக்கும் சேர்ந்தது.

    மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை’ ஆருத்ரா தரிசனம் என்ற சிறப்பு பெறுகின்றது.

    சிவபிரான் கோவில் கொண்டுள்ள அனைத்து இடங்களிலும் ‘ஆருத்ரா’ தரிசனம் விமர்சையாகக் கொண்டாடப்படும். சிவபிரானின் நடராஜ தோற்றம் கொண்ட ஐந்து திருச்சபைகளில்

    கனக சபை - சிதம்பரம் (தில்லை)

    ஆகிய இடங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    இதில் சிதம்பரம் கூடுதல் சிறப்பினைப் பெறுகின்றது. 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் 9-ம் நாள் இரவும் 10-வது நாள் விடியற்காலையும் மகா அபிஷேகம் நடராஜ பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அன்னைக்கும் நடக்கும். பல மணி நேரங்கள் அபிஷேகத்திற்குப் பிறகு திரு ஆபரண அலங்காரம், சிவபிரானுக்கு ரகசிய பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து திரு வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் சிவபிரானும் பார்வதி தாயாரும் கனக சபையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவர். இந்த பூஜையை பார்த்து வழிபடுவதால் இம்மை வாழ்வுக்கு தேவையான அனைத்து வளங்களும், அமைதியும் கிடைக்கும். கோவிலுள்ளும் பகவானின் மிகப்பெரிய பிரகார உலா நடைபெறும். இந்த பத்து நாளும் தேவாரம், திருவாசகம் ஒலித்த வண்ணம் இருக்கும்.

    மார்கழி மாதத்தில் பெளர்ணமியில் திருவாதிரையில் நீண்ட இரவிலும் விடியற்காலையிலும் தொடரும் இவ்விழா கண் கொள்ளா காட்சியே.

    இறைவன் அகில அண்ட நடனம் புரிவதாக நடராஜ ஸ்வரூம் விளக்கப்படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் வாழ்க்கைச் சுழலை கூறுவதாக இது அமைந்துள்ளது. உலகில் ஒவ்வொரு அணுவிலும் இந்நடனம் நடைபெறுகின்றது. இதுவே ஆதார சக்தி.

    ஒருநாள் மகா விஷ்ணு ஆதிசே‌ஷனின் மீது படுத்தபடி உரக்க சிரித்தாராம், ஆதிசே‌ஷன் ‘ஏன் சிரிக்கின்றீர்கள்’? என்று கேட்க மகாவிஷ்ணு ‘நான் சிவபிரானின்’ நடனத்தினை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்து சிரித்தேன் என்றாராம். இதனைக் கேட்ட ஆதிசே‌ஷனுக்கு தானும் நடராஜ பெருமானின் நடனத்தினை காண வேண்டும் என்ற ஆசை எழுந்ததாம். அவர் பூவுலகில் பாதி மனித, பாதி பாம்பு உருவத்துடன் ‘பதஞ்சலி’ என்ற பெயருடன் அவதரித்தார். நடராஜ பெருமானின் நடனத்தைக் காண சிதம்பரம் சென்றார். அங்கு மற்றொரு முனிவரும் சிவபிரானின் நடனத்தை காண காத்திருந்தார். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் இவர்களுக்கு நடராஜ பெருமானாக பிரபஞ்ச நடன கோலத்தில் காட்சி அளித்தார்.



    ஸ்ரீரங்கத்தில் ரங்க நாதர் முகம் தெற்கு நோக்கி இருக்கும். நடராஜ பெருமானின் முகம் தெற்கு நோக்கி இருக்கும். தெற்கினை எமதர்ம ராஜனின் திசை என்பர். அந்த எம பயத்திலிருந்து நம்மை காப்பதற்கே இருவரும் தெற்கு நோக்கியுள்ளனர் என்ற விளக்கவுரை உள்ளது. இந்த அகில நடனத்தின் மூலம் பிரபஞ்சத்தின் அனைத்து அசைவுகளையும் இறைவன் உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது. இந்த நடனம் நமது அறியாமையை உணர்த்தும் நடனமாகக் கூறப்படுகின்றது’ நடனத்துக்கு அரசர் ‘நடராஜர்’ பிரபஞ்சத்தின் உண்மையினை உணர்த்துகிறார்.

    இலங்கையில் தின்னபுரம் சுந்தரீஸ்வரர் கோவிலில் ‘ஆருத்ரா தரிசனம்‘ ஈழத்து சிதம்பரமாகக் கொண்டாடப்படுகின்றது.

    இந்த விழாவில் அநேக பெண்கள் பத்து நாள் விரதமிருந்து பெளர்ணமி அன்று விரதம் முடிப்பர்.

    2.1.2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்தில் கொண்டாடப்படு கின்றது.

    7, 9-ம் நூற்றாண்டு காலத்தில் சம்பந்தர் தனது தேவாரம் பாடலில்

    கூர்தரு வேல் வல்லர் கோற்றங்கோள் சேரிதனில்

    கார் தெரு சோலை கபாலீச்சரம் அமர்ந்தான்

    எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அப்பர் எழுதியுள்ள திருவாதிரை பதிகத்தில் திருவாரூர் பற்றி குறிப்பிடும் பொழுது.

    முத்து விதாமி மணி பொற் கவரி முறையாலே

    வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்

    எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவிலும் மிகச் சிறப்பான முறையில் ‘ஆருத்ரா தரிசனம்’ கொண்டப்படுகின்றது. அரிசி உணவினை தவிர்த்து விரதமிருத்தல், விரதம் முடித்து பெண்கள் சீரான உடை அணிந்து நடனமாடி கொண்டாடுதல், நில விளக்கு வைத்து ஆடுதல், கை கொட்டி களி என மிக விமர்சையாக கொண்டாடுவர். அர்த்த நாரீஸ்வர வழிபாடு நடைபெறும்.

    தமிழ்நாட்டில் திருவாதிரை அன்று திருவாதிரை களியும், ஒருகாய் கூட்டும் வைத்து வழிபடுவது வழக்கம்.

    சேந்தனார் என்பவர் சிவபிரானுக்கு உணவு படைத்து அதனை பலருக்கும் கொடுத்து மீதியினை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு திருவாதிரை அன்று அவரிடம் பிட்டு மாவு மட்டுமே இருந்தது. அதனையும் வெல்லமும் சேர்த்து பிட்டு களி வைத்து நைவேத்தியம் செய்தார். வேறெதுவும் பகவானுக்கு அளிக்க தன்னிடம் இல்லையே என அவர் வருந்திய பொழுது அங்கு பிட்டு களியாக கொட்டியது. அவரது பக்தியினை மெச்சியே களியும், ஏழு காய் கூட்டும் அன்று இறைவனுக்கு அளிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    பூஜை அறையில் விளக்கேற்றி, பூ வைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து தூப தீபங்கள் காட்டி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ‘ஓம் நமச்சிவாய’ சொல்லுங்கள். சிவ ஸ்தோத்திரம் படியுங்கள். சமைத்த உணவினை நைவேத்தியம் செய்யுங்கள். காகத்திற்கு உணவு அளியுங்கள். ஒரிருவருக்காவது உணவளியுங்கள். குடும்ப நபர்களுடன் சேர்ந்து அமர்ந்து உண்ணுங்கள். உங்கள் பிள்ளைகள் நல்ல மனநிலையில் இருப்பார்கள். ‘சிவமயம்’

    -டாக்டர் கமலிஸ்ரீபால்
    Next Story
    ×